கடந்த 5 வருடங்களாகக் கடன் பிரச்சினை காரணமாகக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிறீஸ் இன் நிலமை அண்மையில் இன்னும் மோசமாகி இருந்ததுடன் மிக இறுக்கமான நிபந்தனைகள் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனிடம் இன்னொரு முறை பாரிய கடன் தொகையைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் அது தள்ளப் பட்டது.
இதன் ஒரு கட்டமாக நேற்று வியாழக்கிழமை கிறீஸின் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ரஸ் பதவி விலகியுதுடன் அந்நாட்டின் எதிர்க்கட்சிகளால் அரசு அமைக்க முடியுமா என்ற கேள்வியையும் கிறீஸ் அதிபர் முன் வைத்துள்ளார்.
ஆனாலும் கிரேக்கப் பாராளுமன்றத்தில் வேறு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் இல்லாத காரணத்தால் இன்னொரு பொதுத் தேர்தல் அங்கு நடைபெற வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் சிப்ராஸின் சிரிஸா கட்சியைச் சேர்ந்த 30 இடதுசாரிக் குழு உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கட்சி அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். கிறீஸில் பாதாளத்துக்குச் சென்றுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், யூரோ நாணயத்துக்கு உலகச் சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் கிறீஸ் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்குமாக இவ்வருடம் பல சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளுடன் ஐரோப்பிய யூனியன் அளிக்க வந்த இன்னுமொரு பாரிய கடன் தொகையைப் பெற பிரதமர் சிப்ராஸ் சம்மதித்திருந்தார். எனினும் இதற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே பெரும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.
இதேவேளை கிறீஸ் பிரதமர் ராஜினாமா செய்து அந்நாடு பொதுத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த ஐரோப்பிய யூனியன் கமிசன் கிறீஸில் நிகழ்ந்துள்ள இம்மாற்றம் அந்நாட்டுக்கான தமது கடன் திட்டத்தைப் பாதிக்காது எனவும் இது ஏற்கனவே கிரேக்கப் பாராளுமன்றத்தால் ஆதரவளிக்கப் பட்ட ஒன்று எனவும் தெரிவித்ததுள்ளது. மேலும் கிரேக்கப் பாராளுமன்றத்தில் வாக்களிப்பு அடிப்படையில் அரசால் அங்கீகரிக்கப் பட்டிருந்த இந்தக் கடன் ஒப்பந்தத் திட்டம் புதிய தேர்தலினால் பாதிக்கப் படாது எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் ஐரோப்பிய யூனியன் கமிசன் தெரிவித்துள்ளது.
கிறீஸில் புதிய பொதுத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 20 இல் நடக்கலாம் என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
-http://4tamilmedia.com