கொரிய தீபகற்பத்தில் மறுபடி யுத்தப் பதற்றம்!:போருக்குத் தயாராக வடகொரிய அதிபர் உத்தரவு

தென்கொரியாவுடன் போருக்குத் தயாராகும் படி வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது இராணுவத்துக்கு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டிருப்பதாகப் பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.நேற்றைய தினம் தென்கொரிய சில ஆர்ட்டிலெரி ஷெல் வீச்சுக்களை வடகொரியா நோக்கி மேற்கொண்டிருந்தது. வடகொரிய அரசுக்கு எதிரான செய்திகளை ஒலிபரப்பி வரும் சியோலுக்கு அண்மையிலுள்ள ஒலிபெருக்கிகளைக் குறி வைத்து வடகொரியா ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே தாம் திருப்பித் தாக்கியதாக தென்கொரியா விளக்கம் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்தே தமது இராணுவத்தை எந்நேரமும் போருக்குத் தயாராகுமாறு வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார். இத்தகவல் அந்நாட்டு அரச தொலைக் காட்சியான கேசிஎன்ஏ இல் வெளியாகியுள்ளது. தற்போது வடகொரியாவில் நிலவும் சூழ்நிலைப் படி அந்நாடு யுத்தத்துக்கு மிக அண்மையில் இருப்பதாகவும் இதற்குக் காரணம் தென்கொரிய அரசின் செயற்பாடு தான் எனவும் சீனாவுக்கான வடகொரியத் தூதுவர் ஜி ஜே ரியொங் இன்று வெள்ளிக்கிழமை பீஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சியோலில் எல்லைப் பகுதிகளில் வடகொரிய அரசுக்கு எதிராக ஒலிபெருக்கிகள் மூலம் நடத்தப் படும் பிரச்சாரத்தை உடனே சனிக்கிழமை மாலைக்குள் நிறுத்தா விட்டால் தென்கொரியா நிச்சயம் இராணுவ நடவடிக்கையை எதிர் நோக்கும் என வடகொரியா சூளுரைத்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான தென்கொரியா அண்மைக் காலமாக இரும்புத் திரை நாடு என அழைக்கப் படும் வடகொரியாவில் இருந்து எழுப்பப் படும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எப்போதும் தன்னை முழுமையாகத் தயார் படுத்தி வைத்திருப்பதாகவே அறிவித்து வருகின்றது. இந்நிலையில் இதற்கு முன்னும் இவ்விரு நாடுகளும் தமக்கிடையே எல்லைப் பகுதிகளில் ஷெல் வீச்சு அல்லது துப்பாக்கிச் சூடு என்பவற்றை நிகழ்த்தி போர்ப் பதற்ற நிலையை பல தடவைகள் ஏற்படுத்தி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 1953 இல் முடிவுக்கு வந்த கொரிய யுத்தத்தின் போது போர் நிறுத்தம் மாத்திரமே செய்து கொள்ளப் பட்ட போதும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் அமைதி உடன்படிக்கை எதுவும் இதுவரை எட்டப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://4tamilmedia.com