ஜேர்மனியில் அகதிகள் முகாம் திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பிற்கு வந்த பொலிசாரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெஸ்டன் நகருக்கு அருகில் உள்ள ஹெய்டனவ் என்ற பகுதியில் அகதிகள் தங்குவதற்கு முகாம் ஒன்று திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வந்துள்ளன.
இந்த முகாமை திறக்க கூடாது, முகாமிற்கு வரும் நூற்றுக்கணக்கணக்கான அகதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என அந்நாட்டின் தேசிய ஜனநாயக கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் அகதிகள் எதிர்ப்பாளர்கள் புதிய முகாமை முற்றுகை இட்டுள்ளனர்.
அப்போது அகதிகள் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியுள்ளது.
முகாமிற்கு வெளியே கலவரம் மூளும் சூழல் இருப்பதை அறிந்த பொலிஸ் படையினர் அங்கு விரைந்து வந்து தாக்குதலை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.
நிலைமையை கட்டுப்படுத்த இயலாததால் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அகதிகள் எதிர்ப்பாளர்கள், பொலிசாரை நோக்கி தங்கள் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
கற்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளை பொலிசாரை நோக்கி வீசியதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இந்த தாக்குதலில் பொலிசார் சிலர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால், தாக்குதலில் ஈடுபட்டு மோசமான காயங்கள் அடைந்தவர்களை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதல் நடந்தபோது சுமார் 250 அகதிகள் அந்த புதிய மையத்திற்கு நுழைந்ததால், போராட்டம் மேலும் தீவிரம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சில மணி நேரங்கள் நடந்த போராட்டம் பின்னர் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் எத்தனை நபர்களை பொலிசார் கைது செய்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை.
அகதிகளுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் வெளியான புள்ளிவிபரத்தில் ஜேர்மனியில் புகலிடம் கோரி இந்தாண்டு 8 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்க கூடும் என தெரியவந்துள்ளது.
-http://world.lankasri.com