ஓவியங்களால் தைவான் கிராமத்தைக் காப்பாற்றிய ‘ரெயின்போ தாத்தா’

rainbow-grandpaதைச்சுங்: தைவானில் முதியவர் ஒருவர் தனது ஓவியங்களால் ஒரு கிராமத்தையே காப்பாற்றியுள்ளார். தற்போது அந்தக் கிராமம் சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. தைவானில் சுமார் 1200 வீடுகளைக் கொண்டது தாய்சங்க் கிராமம். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இந்த கிராமத்தில் மக்கள் அனைவரும் வெளியேறி விட, ஒரு கட்டத்தில் 12 வீடுகளில் மட்டுமே அங்கு மக்கள் வசித்தனர். இதனால் அரசும், தனியார் நிறுவனங்களும் இந்தக் கிராமத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டன. எனவே, இந்தக் கிராமத்தை மீட்கும் நடவடிக்கையைத் தொடங்கினார் ஹூவாங் யுங்-பூ (93) என்ற முதியவர்.

முன்னாள் ராணுவ வீரரான ஹூவாங் அந்தக் கிராமத்திலுள்ள சுவர்கள் முழுவதும் தனது ஓவியங்களால் நிரப்ப ஆரம்பித்தார்.

ஹூவாங்கின் இந்த முயற்சி அருகில் இருந்த பல்கலைக்கழக மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எனவே, அவர்களும் ஹூவாங்கோடு சேர்ந்து ஓவியங்கள் வரையத் தொடங்கினர்.

ஹூவாங்கின் முயற்சியால் அந்தக் கிராமம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. இதனால், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அந்தக் கிராமத்திற்கு வரத் தொடங்கினர்.

இன்றும் தினமும் காலை 3 மணிக்கு எழுந்து, கிராமத்தில் இருக்கும் கைவிடப்பட்ட வீடுகள், சுவர்கள், சாலைகளில் ஓவியம் வரைந்து வருகிறார் ஹூவாங்.

விரைவில் அந்த கிராமத்தை கலாச்சார சுற்றுலா தளமாக அறிவிக்க இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.