அநாதையாக நின்ற லொறியில் அழுகிய 70 மனித சடலங்கள்! அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்

bodies_001ஆஸ்திரியா நாட்டில் உள்ள சாலை ஒன்றில் அநாதையாக நின்ற லொறியில் சுமார் 70க்கும் அதிகமான மனித சடலங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டிற்கு அருகில் உள்ள ஹங்கேரி நாட்டின் எல்லையோரத்தில் உள்ள A6 போக்குவரத்து சாலையில் லொறி ஒன்று அநாதையாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, லொறி நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று காலை பொலிசார் சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது, வியன்னா நகருக்கு செல்ல இருந்த அந்த வாகனத்திற்குள் அழுகிய நிலையில், 70க்கும் மேற்பட்ட நிலையில் மனித சடலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களாக இருக்க கூடும் என்றும் பொலிசாரின் பரிசோதனைக்கு பயந்து வாகன ஓட்டுனர் லொறியை நிறுத்தி விட்டு தப்பியிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

லொறியின் உரிமையாளர் குறித்து விசாரணை செய்ததில், அது ஸ்லோவோக்கியா நாட்டை சேர்ந்த ஹைசா என்ற கோழிப்பண்ணையை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, ஆஸ்திரியா நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னதாகவே, அதாவது 2 நாட்களுக்கு முன்னரே அவர்கள் இறந்திருக்க வேண்டும் என கணித்துள்ளனர்.

சடலங்கள் கண்டுபிடித்திருப்பது தொடர்பாக ஆஸ்திரியா நாட்டு பொலிசார் இன்று அவசர ஆலோசனை நடத்தவிருப்பதாகவும், லொறியில் பயணித்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற உறுதியான தகவல்களை இந்த கூட்டத்தில் பொலிசார் தெரிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com