வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்புக்கு உள்ளக விசாரணை பொறிமுறையை கோருவதற்கான சமிக்ஞையே அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பின் போது எமக்கு காட்டப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாணசபையின் 34 வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில் இன படுகொலைக்கு எதற்காக சர்வதேச விசாரணையினை நாங்கள் கோருகிறோம் என்பதற்கான விளக்கத்தை சபைக்கு வழங்கும் வகையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதுமே அவர் இவ்வாறு கூறினார்.
முதலமைச்சர் இன்றைய தினம் மாகாணசபையில் இன அழிப்புக்கான தீர்மானத்தை கொண்டுவந்திருந்த நிலையில் இந்த பிரேரணை எதற்காக? சர்வதேச ஒழுங்கை மீறி செயற்பட்டால் வெற்றி கிடைக்குமா? என எதிர்கட்சி உறுப்பினர் எஸ்.தவநாதன் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், சர்வதேச நாடுகளுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் அல்லது அவர்களுடைய நலன்சார்ந்த விடயங்கள் இருக்கும்.
அதற்காக எங்களுடைய நலன்களை விட்டுக் கொடுக்க முடியாது அண்மையில் நாம் அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்தபோது அந்தச் சந்திப்பில் உள்ளக விசாரணைக்கான சமிக்ஞையே காண்பிக்கப்பட்டது.
ஆனால் எங்களுடைய மக்கள் உள்ளக விசாரணையில் நம்பிக்கையற்றிருக்கின்றார்கள். அதுவே எங்கள் நிலைப்பாடும் கூட இந்நிலையிலேயே நாங்கள் இந்த தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறோம்.
நாங்கள் எங்களுக்கு எது சரியானது, எது பிழையானது என்பதை ஆராய்ந்து அதையே கேட்க வேண்டும். அதனை யாரும் பிழையென கூறமுடியாது என முதலமைச்சர் விளக்கினார்.
-http://www.tamilwin.com