வரி தொடர்பான குற்ற வழக்குகளில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், சுவிட்சர்லாந்து அரசு சட்டத் திருத்தம் கொண்டுவரவுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான மசோதாவுக்கு சுவிஸ் நாட்டு அரசின் அதிகாரமிக்க திட்டக் குழுவான “சுவிஸ் ஒன்றிய கவுன்சில்’ புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா தொடர்பாக, வரும் டிசம்பர் மாதம் வரை பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். பின்னர் சுவிஸ் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், சுவிஸ் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை அந்நாட்டு அரசு நேரடியாக இந்தியாவுக்கு வழங்க முடியும்.
கருப்புப் பணத்தைத் தடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக, சுவிட்சர்லாந்து அரசு தனது சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com