வெடி விபத்து 50 சவூதி கூட்டுப் படை வீரர்கள் பலி

  • யேமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள்.

    யேமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள்.

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தி வரும் சவூதி தலைமையிலான கூட்டுப் படையைச் சேர்ந்த 45 ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தினரும், 5 பஹ்ரைன் ராணுவத்தினரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தாங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

யேமனில் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை கடந்த ஆண்டு கைப்பற்றிய ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரான ஏடனை நோக்கி முன்னேறினர்.

அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில், சவூதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் கடந்த மார்ச் மாதம் கூட்டணி அமைத்து கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.

இந்த நிலையில், சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஆயுதக் கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு வீரர்கள் 45 பேர் உயிரிழந்தனர் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது.

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள் பலியானதாக பஹ்ரைன் நாடும் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் பலியான அந்த விபத்தைதான் பஹ்ரான் அரசும் குறிப்பிடுவதாக யேமன் அரசு கூறியுள்ளது.

சவூதி கூட்டுப்படை அமைக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து, அந்தப் படைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு இது எனக் கூறப்படுகிறது.

-http://www.dinamani.com