உயிருடன் இருக்கனுமா?.. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் போடும் 11 நிபந்தனைகள்

isis_irakசனா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக் மற்றும் சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக், சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் உள்ள அல் கர்யாதீன் நகரில் வசிக்கும் ஏராளமான கிறிஸ்தவர்கள் உயிருக்கு பயந்து திம்மா என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெற பிற மதத்தவர்கள் திம்மா எனப்படும் 11 விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுடன் ஜிஸ்யா என்ற வரியை செலுத்த வேண்டும்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றும் 11 விதிமுறைகள்,

1. நகரில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்கள் கட்டக் கூடாது.

2. முஸ்லீம்கள் வசிக்கும் தெருக்கள் அல்லது சந்தைகளில் கிறிஸ்தவர்கள் சிலுவை அல்லது பைபிளை காண்பிக்கக் கூடாது. அவர்களின் பிரார்த்தனை கூட்டங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது.

3. இஸ்லாமியர்களுக்கு கேட்கும்படி பைபிள் வாசிக்கக் கூடாது. தேவாலய மணிஓசையும் இஸ்லாமியர்களுக்கு கேட்கும்படி இருக்கக் கூடாது.

4. கிறிஸ்தவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படக் கூடாது. இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதாவது சதி நடப்பது தெரிந்தால் உடனே அதை தெரியப்படுத்த வேண்டும்.

5. பொது இடத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் மத சடங்குகளை செய்யக் கூடாது.

6. கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை மதிக்க வேண்டும். அவர்களின் மதத்தை விமர்சிக்கக் கூடாது.

7. பணக்கார கிறிஸ்தவர்கள் ஆண்டு ஜிஸ்யாவாக நான்கு தங்க தினார்களையும், நடுத்தர வர்க்கத்தினர் 2 தங்க தினார்களையும், ஏழைகள் ஒரு தினாரையும் செலுத்த வேண்டும். கிறிஸ்தவர்கள் தங்கள் வருமானத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஜிஸ்யாவை இரண்டு தவணைகளில் செலுத்தலாம்.

8. கிறிஸ்தவர்கள் யாரும் சொந்தமாக துப்பாக்கிகள் வைத்திருக்கக் கூடாது.

9. இஸ்லாமியர்களுடன் அல்லது இஸ்லாமிய சந்தைகளில் கிறிஸ்தவர்கள் பன்னி அல்லது மது வியாபாரம் செய்யக் கூடாது. மேலும் அவர்கள் பொது இடங்களில் மது அருந்தக் கூடாது.

10. அவர்களின் கல்லறைகளை அவர்களே பராமரிக்க வேண்டும்.

11. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சொல்லும்படி தான் ஆடை அணிய வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும்.

tamil.oneindia.com