அடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி கூடுதலாக 42,000 அகதிகள் வருவார்கள் என ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கெனவே அங்குள்ள அகதிகளுக்குப் போதிய வசதிகள் அளிக்கப்படாததால் அவர்கள் தவித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கூடுதலாக வரும் இந்த அகதிகளுக்கான நிவாரண உதவிகளைச் செய்ய தயாராக இருக்கும்படி ஹங்கேரியை அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நல ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
செர்பியாவையொட்டிய ஹங்கேரி எல்லைப் பகுதியில், மிக மோசமானச் சூழலில் கடந்த இரு நாள்களாக அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கூடாரங்கள், படுக்கைகள், போர்வைகள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளோம்.
போரால் பாதிக்கப்பட்ட மேற்காசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஏராளமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கேட்டு வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கேற்ற முன்னேற்பாடுகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளாதது ஐரோப்பிய யூனியன் செய்த தவறாகும்.
28 நாடுகளை உறுப்புகளாகக் கொண்டுள்ள ஐரோப்பிய யூனியன், சில லட்சம் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதற்குத் திணறுவது வேடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள ஹங்கேரியும், கிரீஸýம், அகதிகள் பிரச்னையை எதிர்கொள்வதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தவறி விட்டன.
அடுத்த 10 நாள்களில் கிரீஸிலிருந்து 30,000 அகதிகளும், மெஸடோனியாவிலிருந்து 7,000, செர்பியாவிலிருந்து 5,000 அகதிகளும் ஹங்கேரிக்குள் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சூழலை எதிர்கொள்ள ஹங்கேரியும், சர்வதேச நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. அகதிகள் நல ஆணைய அதிகாரிகள் கூறினர்.
கூடுதல் அகதிகளை ஏற்கத் தயார்: ஆஸ்திரேலியா
மெல்போர்ன், செப். 9: போரால் பாதிக்கப்பட்டுள்ள மேற்காசிய நாடுகளிலிருந்து கூடுதலாக 12,000 அகதிகளை ஏற்கத் தயார் என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் புதன்கிழமை அறிவித்தார்.
இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜோர்டான், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து புகலிடம் தேடி வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 12,000 பேரை ஏற்கத் தயாராக உள்ளோம்.
மேலும், சிரியா, இராக் ஆகிய நாடுகளிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள 2.4 லட்சம் அகதிகளுக்கு 4.4 கோடி டாலர்கள் (சுமார் ரூ.292.5 கோடி) மதிப்பிலான நிவாரண உதவிகளை அளிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://www.dinamani.com