ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கையை இறுதிப்படுத்தியதை அடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
தமது இறுதி அறிக்கையின் இரண்டு பிரதிகளை ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இலங்கையிடம் கடந்த வெள்ளிக் கிழமையன்று கையளித்துள்ளனர்.
இந்தநிலையில் இலங்கைக்கு இந்த அறிக்கை தொடர்பில் பதிலளிக்க ஐந்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2014இல் நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி அமைக்கப்பட்ட போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் தமது விசாரணைகளை நடத்தியது.
இதன் ஆலோசகராக நோபல் பரிசை வென்ற போர்க்குற்ற விசாரணைகளில் அனுபவம் பெற்றிருந்த பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அடிசாரி பணியாற்றினார்.
அவருடன் நியூஸிலாந்தின் முன்னாள் நீதிபதியும் கம்போடியா கெமுரூச் போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இருந்தவருமான சில்வியா காட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க தலைவர் அஸ்மா ஜகாங்கிர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் போர்க்குற்ற அறிக்கை வெளிவர மூன்று மாதங்கள் இருந்தபோதே இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான வரைபுகளை தயாரிக்க ஆரம்பித்தது.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.
இதன்அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இன்னும் ஐந்து நாட்களில் மனித உரிமைகள் பேரவையில் உள்நாட்டு பொறிமுறைக்கான நியாயத்தை ஒப்புவிக்கவிருக்கிறது.
அதேநேரம் இந்த மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட போர்க்குற்ற விசாரணைகளில் இறுதி விசாரணையானது இலங்கை தொடர்பான விசாரணையாகவே இருக்கும் என்று ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://www.tamilwin.com