விமான நிலையத்தையே அகதிகள் முகாமாக மாற்றிய ஜேர்மனி: இடப்பற்றாக்குறையால் அதிரடி நடவடிக்கை

airport_refugeecamp_001ஜேர்மனியில் அகதிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அவர்களை தங்க வைப்பதற்கு பெர்லினில் உள்ள பிரபலமான விமான நிலையத்தை அகதிகள் முகாமாக மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி தலைநகரான பெர்லினில் உள்ள Tempelhof என்ற விமான நிலையம் கடந்த 1927ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர், இதன் வடிவமைப்பை ஹிட்லரின் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது.

கடந்த 80 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த விமான நிலையம் கடந்த 2008ம் ஆண்டு சில வசதி குறைபாடுகள் காரணங்களால் மூடப்பட்டது.

இந்த விமான நிலையத்தை தான் தற்போது அகதிகள் முகாமாக பெர்லின் நகர மேயர் மைக்கேல் முல்லர் அறிவித்துள்ளார்.

இந்த விமான நிலையத்தில் அகதிகள் தங்குவது மட்டுமின்றி, பிற பகுதிகளில் தங்கியுள்ள அகதிகளுக்கு இந்த விமான நிலையத்திலிருந்து உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விமான நிலையத்தை அகதிகள் தங்குவதற்கு ஏற்றதாக தங்கும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டு சுமார் 800க்கும் அதிகமாக அகதிகள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 80 ஆயிரம் அகதிகள் வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வெளியாகியுள்ள செய்தியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் ஜேர்மனியை நோக்கி படையெடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகதிகளின் வருகை அதிகரிப்பதால் தான் தற்போது இந்த விமான நிலையத்தையும் அகதிகள் முகாமாக மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அகதிகளின் குடியேற்ற அனுமதி விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், ஒரு நாளில் 100 முதல் 150 அகதிகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com