அகதிகள் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அவசரக் கூட்டத்துக்கு ஜெர்மனி, ஆஸ்திரிய நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்ட மேற்காசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி வரும் அகதிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் நூற்றுக்கணக்கான அகதிகள் விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்கள், மக்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.
இதனால், அகதிகள் விவகாரத்துக்கு விரைந்து தீர்வு காணும்படி தத்தமது அரசுகளை ஐரோப்பிய நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்க நாடுகள் முன்வந்தன.
எனினும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல், ஆஸ்திரிய அதிபர் வெர்னர் ஃபேமான் ஆகியோர் இதுதொடர்பாக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், ஏஞ்சலா மெர்கெலும், வெர்னர் ஃபாமானும் செய்தியாளர்களிடையே பேசினர்.
அப்போது மெர்கெல் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளின் ஒருமித்த செயல்பாட்டின் மூலம்தான் அகதிகள் விவகாரத்துக்குத் தீர்வு காண முடியும்.
இந்த விவகாரத்தைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனுக்கும் உள்ளது.
எனவே, இதுகுறித்து விவாதிக்க ஐரோப்பிய யூனியனின் அவசரக் கூட்டத்தை அடுத்த வாரம் கூட்ட அமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்கைக் கேட்டுள்ளோம்.
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விவகாரம் மட்டுமின்றி, அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி வருவதற்கான அடிப்படைக் காரணங்களையும் அலசி ஆராய்ந்து, அதற்கான தீர்வு காண்பது குறித்தும் அந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார் மெர்கெல்.
ஆஸ்திரிய அதிபர் வெர்னர் ஃபேமான் கூறியதாவது:
ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் மட்டும் அகதிகள் விவகாரத்துக்குத் தீர்வு காண முடியாது.
இது அனைத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் பொதுவான பிரச்னை என்றார் அவர்.
-http://www.dinamani.com