ஐ.நா.அறிக்கையினை பூதாகரமாக காண்பித்து அதனால் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எத்தனிக்கும் தரப்பினர் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒருபோதும் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றது என்றோ சர்வதேச விசாரணை வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாறாக யுத்தக் குற்றம் இடம்பெற்றதா என்பது குறித்து உள்நாட்டு பொறிமுறை அமைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றே பணிப்புரை விடுக்கப்பட்டது என்பதை கருத்திற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தல் விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து நாடு தொடர்பில் சர்வதேச விசாரணை அறிக்கை வேண்டும் என்று குறிப்பிட்ட போதும் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் போவதாக அறிவித்த போதும் எதிர்த்தவர்களே இன்றும் பொய் விஷமத்தனமான கருத்துக்களை சமூகத்தில் பரவச் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
என்மீது யார் சேறு பூசுகிறார் என்பது தொடர்பில் எனக்கு கவலை இல்லை. ஆனால் நாட்டின் சுயாதீன தன்மையின் மீது கைவைக்க நான் எவருக்கும் இடமளிக்கமாட்டேன். அதனாலேயே தேசிய அரசாங்கம் அமைத்து உள்நாட்டு பொறிமுறைக்கும் வழி செய்தோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 109வது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கடந்த 14ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றம் தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டது. குறித்த அறிக்கை வெளியிடும் போது எந்த இடத்திலும் இலங்கையில் யுத்த குற்றம் இடம் பெற்றது என்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் திட்டவட்டமாக குறிப்பிடப்படவில்லை. மாறாக யுத்த குற்றம் இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையில் ஆராய்ந்து பாருங்கள் என்றே பரிந்துரை செய்தது.
ஆனால் இதனை விளங்கிக் கொள்ளத சில தரப்பினர் முன்னாள் தலைவர்களை தண்டிக்கப் போகிறார்கள் என்ற விதத்தில் பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர்
அதேவேளை அவர்களது குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் ஐ.நா. அறிக்கையை பூதாகரமாக காண்பித்து இனவாதத்தை கட்டவிழ்த்து விட முன்னெடுக்கும் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 1984,1985ம் ஆண்டுகளில் யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் நாட்டில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறிய போதும் மேற்குறித்த தரப்பினரே அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
அது மட்டுமன்றி குறித்த தரப்பு இந்து-லங்கா ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் எதிர்த்தது. ஆனால் இன்று அதனாலேயே எமது நாட்டை காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
இவை அனைத்தும் எமக்கு சேறு பூசுவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள். என்மீது எவர் சேறு பூசினாலும் அதற்காக நாம் கவலையடையப் போவதில்லை. நாட்டின் மீது சேறு பூசப்படாமல் காப்பதே எமது தேவையாகும். அதனால் தான் சர்வதேச விசாரணையை தற்போது உள்நாட்டு பெறிமுறையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்காகவே தேசிய அரசாங்கமும் அமைத்தோம்.
எவ்வாறாயினும் அன்று பல தடவை முயற்சித்த போதும் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்.ஜயவர்தனவுக்கு கிடைக்காத வாய்ப்பு தேசிய அரசாங்கமாக செயற்பட எனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிடைத்துள்ளது. அதனை கொண்டு நாட்டின் வலுவான அபிவிருத்தியை ஒருபடி முன்நகர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்யும் உத்தியை நன்கு அறிந்துள்ளது அதன்படி சிறந்த ஆட்சியொன்றினை முன்னெடுத்துச் செல்ல எம்மால் முடியும்.
-http://www.tamilwin.com
மேற்கத்திய ராஜதந்திரம் இலங்கையை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்வதே இதம் நோக்கம்.மடிந்த ஈழ தமிழனுக்கு நீதி வெறும் சதுரங்க நகர்வுகள்.