தெற்கு சூடான் எண்ணெய் லாரி வெடிவிபத்து :பலி எண்ணிக்கை 193-ஆக உயர்வு

south_sudanதெற்கு சூடான் நாட்டில் நேரிட்ட எண்ணெய் லாரி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்தது.

இதுகுறித்து, விபத்து நிகழ்ந்த மேற்கு ஈக்வடோரியா மாகாண ஆளுநர் பேட்ரிக் ரஃபேல் ஸமோய் கூறியதாவது:

புதன்கிழமை நிகழ்ந்த எண்ணெய் லாரி வெடி விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் பலர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்துள்ளது.

சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மட்டும் கொண்டு, 193 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், மேலும் பலர் காணமல் போயுள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றார் அவர்.

தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவுக்கு 250 கி.மீ. தொலைவிலுள்ள மாரிடி நகருக்கு அருகே, எரிபொருள் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை விபத்துக்குள்ளானது. அந்த லாரியிலிருந்த எண்ணெய் வெளியேறி அந்தப் பகுதியில் வழிந்தோடியது. அதையடுத்து அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 1,000 பேர் அங்கு கூடி, வழிந்தோடும் எண்ணெயைச் சேகரித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எண்ணெயில் தீப்பற்றி அந்த லாரி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 85-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், விபத்தில் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து, விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்துள்ளது.

பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்க, போதுமான மருந்துகள், வலி நிவாரணிகள் இல்லாத நிலை உள்ளதாக மருத்துவர்கள் புகார் தெரிவித்தனர்.

தெற்கு சூடானில் விபத்துக்குள்ளான எண்ணெய் லாரிகளிலிருந்து எரிபொருள் சேகரிக்க பொதுமக்கள் கூடும்போது, வெடி விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

உள்நாட்டுச் சண்டை காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்த நாட்டில், உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காத அளவு உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

-http://www.dinamani.com