ஜெனீவா அறிக்கையின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்றக் கோரிக்கை நீக்கப்படும்! ராஜித சேனாரத்ன

rajithaஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணை தொடர்பான விடயம் நீக்கப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன,

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை இறுதியானது அல்ல. இந்த அறிக்கையில் வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணைக்குப் பதிலாக உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக்கு வல்லரசு நாடுகள் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளன.

மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்கும்படி தற்போது மஹிந்த ராஜபக்ச வலியுறுத்துகின்றார். இந்தப் பிரச்சினை இந்தளவுக்கு தீவிரமாவதற்கு மஹிந்த ராஜபக்ச தான் காரணம்.

தற்போது கண்டபடி அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தயான் ஜயதிலக போன்றவர்கள் தான் இதில் சிக்கல்களை ஏற்படுத்தி இருந்தார்கள். அவர்கள் அன்றைக்கு பல விடயங்களை ஏற்றுக் கொண்டு வழங்கிய ஒப்புதல் கடிதங்கள் எங்களிடம் உள்ளது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச உருவாக்கிய புண்ணுக்கு அரசாங்கம் மருந்து கட்டும் நிலை

ஐ. நா. வின் அறிக்கையை நிராகரிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எம்.பி. விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்தது.

இது தொடர்பில் நேற்றுக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நிலைமை இந்தளவு மோசமடைந்ததற்கு மஹிந்த ராஜபக்சவே காரணம் என்றும் அவர் உருவாக்கிய புண்ணுக்கு நாம் மருந்து கட்ட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முரணான கருத்துக்களையே முன்வைத்துவரும் மஹிந்த ராஜபக்ச, அன்று ஐ. நாவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததே நிலைமை மோசமடையக் காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுக்குப் போய் 13+ பிளஸ் பற்றி பேசிவிட்டு இங்கு வந்து 13 மைனஸ் பற்றிப் பேசியவர் மஹிந்த ராஜபக்ச. நேரத்துக்குத் தகுந்தாற்போல் செயற்படுபவர். எந்தவொரு கொள்கையுமில்லாதவர்

அவர். அன்று 13 மைனஸ் நடைமுறைப்படுத்தினால் நான் பதவி விலகுவேன் என்று கூறியதால் அது தப்பித்தது. முழு பாராளுமன்றக் குழுவிலும் அது பற்றி நான் மட்டுமே பேசினேன். அவ்வாறில்லாவிட்டால் நாம் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் விளக்குகையில்,

மேற்படி அறிக்கையானது மனித உரிமைக் குழுவின் அறிக்கையாகும். ஐ. நா. 24ம் திகதியே இறுதித் தீர்மானத்துக்கு வரும். அப்போது வெளியிடப்படுவதே முழுமையான அறிக்கை.

அமெரிக்கா முன்வைத்துள்ள அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது. அதில் ஹைபிரிட் பற்றி குறிப்பிடப்படவில்லை. உள்ளக விசாரணையொன்றையே அவர்களும் இதில் பரிந்துரைக்கின்றனர். இதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தியா, சீனா உட்பட முக்கிய நாடுகள் பலவும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. அயர்லாந்து போன்ற சில நாடுகளே இதனை விரும்பவில்லை. அந்நாடுகள் மனித உரிமை தொடர்பில் உறுதியாக செயற்படும் நாடுகளென தம்மைக் காட்டிக் கொள்கின்றன. அவற்றைத் தவிர ஏனைய நாடுகள் தேசிய ரீதியிலான உள்ளக விசாரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இறுதியாக அனைத்து ஆலோசனைகளையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. அனைத்தையும் பார்த்த பின்பே 24ம் திகதி எமது யோசனையை நாம் ஐ. நா.வுக்குச் சமர்ப்பிக்கவுள்ளோம்.

தற்போதுள்ள நிலைமையின்படி ‘ஹைபிரிட்’ என்பது கிடையாது. இறுதியில் ஐ.நாவின் ஆலோசனையும் உள்ளக தேசிய பொறிமுறைக்கானதாகவே நிறைவேற்றப்படும். அத்தகைய தேசிய பொறிமுறையின் போது சிலவேளை வெளிநாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டி வரலாம்.

மஹிந்த ராஜபக்ச அவரது ஆட்சிக் காலத்தில் மூவரை நியமித்தார். டெஸ்மன்ட் சில்வா உள்ளிட்ட மூவர் அதிலடங்கினர். உண்மையில் பரணகம அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்ட விடயமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த குழுவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

இறுதி அறிக்கை எவ்வாறு நிறைவேற்றப்பட போகிறது என்பதையே நாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கிணங்கவே அரசாங்கம் செயற்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெளிவுபடுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசே ஐ.நா. அறிக்கையை நிராகரிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளமை தொடர்பில் இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

அவர் இருந்திருந்தால் அவ்வாறுதான் செய்திருப்பார். அனைத்தையும் சிக்கலாக்கியதும் அவரே தான். ஐ. நா. வின் அனைத்து அறிக்கைகளையும் நிராகரித்துவிட்டு மஹிந்த எவ்வாறு அங்கு சென்று உரையாற்றியிருக்க முடியும்? என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார். அதையும் அவர் நிராகரித்திருக்கலாமே ஏன் அவ்வாறு செயற்படவில்லை.

நாம் யுத்தத்தை மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வந்த போது அதே மே மாதத்தில் 23ம் திகதி அவர் பான் கீ மூனுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அது பற்றி கூறியுள்ளாரே. அப்போதிருந்தே இந்த விவகாரம் மோசமாக ஆரம்பித்தது என்பதே உண்மை.

தாமே சிலவற்றை ஒப்புக்கொண்டிருந்தார் அவர். அதேவேளை மே மாதம் 27ம் திகதி ஜயதிலக்க அறிக்கையில் அரசு செயற்பட்ட விதம் பற்றி கூறப்பட்டுள்ளதே. தாம் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரே அப்போது தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ச உருவாக்கிய புண்ணுக்கே நாம் மருந்து கட்ட வேண்டி யுள்ளது. தாம் எவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்று அவரே முன்வந்து தெரிவித்திருந்தார்.

அவ்வாறு கூறிவிட்டு அதை செயற்படுத்தாமலிருந்ததே நிலைமை மோசமாக காரணமானது. உறுதியளித்ததை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு இப்போது இவ்வாறு கூறினால் அது முறையாகுமா? அப்போது அவரோடு செயற்பட்டவர்களே இப்போதும் அவரோடிருந்து கொண்டு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் தாம் மனித உரிமை விடயம் சம்பந்தமாகவன்றி குறைகளைக் கேட்டறிவதற்கோ குழு நியமித்ததாகக் கூறியுள்ளாரே என ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி யெழுப்பினர்.

ஏன் அப்பட்டமான பொய்கூற வேண்டும். குழு அமைப்பது தொடர்பாக அவர் பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் அப்போது வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யா என நான் கேட்க விரும்புகிறேன். இப்போது அவர் கூறுபவற்றுக்கும் பதில் கூறும் பொறுப்பு ஊடகங்களுடையதே என்றும் அமைச்சர் அதற்குப் பதிலளித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: