அகதிகளுக்கு புகலிடம் வழங்க ஐரோப்பிய யூனியன் அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

ref_001புகலிடம் கோரி ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள அகதிகளை, உறுப்பு நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய யூனியன் உள்துறை அமைச்சர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆபத்தான கடல் பயணத்தின் மூலமும் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கேட்கும் நபர்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புகலிடம் கோரி ஐரோப்பிய நாடுகளில் நுழைந்துள்ள ஒரு லட்சத்து  இருபதாயிரம் பேரை அதன் உறுப்பு நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய யூனியன் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய ஐரோப்பிய நாடுகளான செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அகதிகள் தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தது.

இதன் முடிவில் ஐரோப்பிய கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதரவற்ற நிலையில் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பை வேண்டி இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் கோரி நுழைந்துள்ள மக்களை பரவலாக அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய யூனியனின் நிர்வாக அமைப்பு இதனை நடைமுறைப்படுத்தும் பணியைச் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com