மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்ததற்கு சவுதி அரேபிய அரசின் திறமையற்ற ஆட்சி தான் காரணம் என்பதால் உயிரிழப்பிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் நாடு பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
நேற்று காலை மெக்காவில் சுமார் 2 லட்சம் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட ‘ஹஜ்’ புனித பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 800க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் ஈரான் -131, இந்தியா -14, எகிப்து -8, பாகிஸ்தான் -6, துருக்கி -4, இந்தோனேசியா -3, கென்யா -3 உள்ளிட்ட சுமார் 717 பேர் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்விற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக சவதி அரேபியா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால், இந்த காரணத்தை நைஜீரியா நாடு ஏற்க மறுத்துள்ள நிலையில், ஈரான் நாடு ஒரு அதிரடி அறிவிப்பை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியா அரசின் திறனற்ற ஆட்சியே இந்த விபத்திற்கு காரணம். 717 பேரின் உயிரிழப்பிற்கு அந்நாட்டு அரசாங்கம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
மெக்காவில் உயிரிழந்த வெளிநாட்டினர்களில் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களே அதிகமானவர்கள் ஆவர்.
இந்நிலையில், சவுதி அரேபிய மன்னரான சல்மான், விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-http://world.lankasri.com