அமெரிக்க நாட்டில் சக்கர நாற்காலியில் சென்ற கருப்பின நோயாளி ஒருவரை சுற்றி வளைத்த 4 பொலிசார் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில், பொலிசாரை பெண் ஒருவர் தொடர்புக்கொண்டுள்ளார்.
டுயூலிப் பகுதியில் சக்கர நாற்காலியில் உள்ள கருப்பின நபர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டதாக தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலை பெற்ற பொலிசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு ஜெரிமி மெக்டோல் என்ற 28 வயதான கருப்பின நபர் ஒருவர் நோயாளிகளுக்குரிய சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இருந்துள்ளார்.
இதனை பார்த்த பொலிசார் ஒருவர், ‘துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு கைகளை மேலே தூக்கு’ என உத்தரவிட்டவாறு அவரை நெருங்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்நிலையில், மற்ற 3 பொலிசார் அந்த இடத்திற்கு வந்தவுடன் அத்தனை பொலிசாரும் அந்த கருப்பின நபரை நோக்கி துப்பாக்கிகளை குறி வைத்தவாறு சுற்று வளைக்கின்றனர்.
சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள கருப்பின நபர், தனது ஆடையை மட்டும் சரி செய்வது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சுமார் 47 வினாடிகளுக்கு பிறகு, சுமார் 10 முறை துப்பாக்கியால் சரமாரியாக சுடப்படுகிறது.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த பொலிசார், ஜெரிமியிடம் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால், ஜெரிமியின் உறவினர்கள் கூறுகையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் எந்த அசைவும் இல்லாத ஜெரிமியை பொலிசார் தான் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஜெரிமி இறந்த இடத்திலும், தற்போது வெளியாகியுள்ள வீடியோவிலும் அவரிடம் எந்த துப்பாக்கியும் இல்லை. ஜெரிமி இறந்தது பொலிசாரின் துப்பாக்கி சூட்டினால் தான் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஜெரிமியை பொலிசார் தான் சுட்டுக்கொன்றுள்ளதாக ஆதாரங்கள் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து வில்மிங்டன் உயர் பொலிசார் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://world.lankasri.com