போர்க்குற்றவாளி மகிந்தவைக் காட்டிக் கொடுக்க விரும்பாத மைத்திரி!

maithrirajapakseஇலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் என்னும் மைத்திரி, ரணில், அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு உதவி செய்தவர்களில் பலருக்கு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவி செய்திருக்கின்றார்.

அதாவது அவர் நன்றி மறப்பது நன்றன்று என்பதை உணர்ந்து செயற்பட்டிருக்கின்றார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்த இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கூட அசைக்க முடியாத ஒரு நபரை, ஏன் அமெரிக்கா,

இந்தியாவினால் கூட வீழ்த்துவதற்கு முடியாத ஒருவரை வீழ்த்தி இலங்கையின் அரியாசனைத்தை அலங்கரிக்கும் பேற்றைப் பெற்றவர் மைத்திரி. அப்பேற்பட்ட பேற்றைப் பெறுவதற்கு உதவியவர்களை எப்படி மறக்க முடியும்.

அதனால் தான் ஆட்சிபீடம் ஏறும் போதே மகிந்தவிற்கு உதவிய முன்னாள் பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்கினார். முதற்படியாக தன்னை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கும், தனது பதவியை கைவிட்டு தனக்காக உதவிய முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கை பிரதமராக்கினார்.

தொடர்ந்து நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், தனக்கே உரித்தான பாணியில் அமைச்சர்களை தேர்வு செய்தார்.

இடையில், ரவி கருணாநாயக்க மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போகின்றார்கள் என்பதை உணர்ந்து மீண்டும் தனது நம்பிக்கை விசுவாசத்தை காண்பிக்க, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை அறிவித்தார்.

ரணிலினதும், ரவியினதும் தலை தப்பியது. இதற்கு முன்னர் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு, பீல்ட் மார்சல் என்னும் பட்டத்தினையும், அவரிடம் இருந்து மகிந்தவினால் புடுங்கப்பட்ட பதவிகளும், மீள் கையளிப்புச் செய்யப்பட்டது.

தனது வாழ் நாள் முழுவதும் ஒரு அமைச்சருக்கு இணையான அந்தஸ்தத்தோடு சரத்பொன்சேகாவினால் நடந்து கொள்ள முடியும்.

இவர் ஒருபுறமிருக்க, நல்லாட்சி அரசாங்கம் அமைய இன்னொரு வழியில் உதவியவர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அவரையும் மைத்திரிபால சிறிசேன மறக்கவில்லை. தேர்தல் முடிந்த கையோடு சில நாட்களுக்குப் பின்னர் அவருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கொடுத்தார்.

இன்னொரு புறத்தில் நல்லாட்சியின் கதாநாயகி என்று அறிமுகப்படுத்தினால் மிகப்பொருந்தும். அவர் தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அவரை கேட்காமல் மைத்திரி காய் நகர்த்தவே மாட்டார். இதனால் அவருக்கும் நன்றிக்கடனாக என்றைக்குமே மைத்திரி இருக்க,

இந்த தரப்பையும், ஒன்றிணைத்து மகிந்தரையும், சீனாவினையும், ஓரம் கட்ட திட்டம் வகுத்துக்கொடுத்த, அமெரிக்காவினையும், இந்தியாவினையும் இவர்கள் மறக்கவில்லை. மகிந்தரின் வீழ்ச்சிக்குப்பின்னர்,

சீனாவின் ஆதிக்கத்தை மெல்ல அகற்றி, அமெரிக்காவினையும், இந்தியாவினையும் அரவணைத்துக் கொண்டார்கள் இவர்கள்.

இவ்விதம் தன்னைச் சூழ்ந்துள்ள நல்லாட்சி நாயகர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அவர்களை ஏற்றி வைத்த மைத்திரிபால, தன்னுயிரையும், தனக்காக பாடுபட்டவர்களின் சுதந்திரத்தினையும், பாதுகாத்த தமிழ் மக்களை மறந்தது வேதனையிலும் வேதனையே.

உண்மையில், இவர்கள் ஒவ்வொருவரும் ஆட்சி மாற்றத்திற்கு எதிராக பாடுபட்டவர்களாயினும், ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குக்கள் அதிகம் தேவையாக இருந்தது. தமிழ் மக்களும், முஸ்லிம்களும், வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தால் இப்பொழுது ஜனாதிபதியாக மகிந்தரே இருந்திருப்பார்.

தன்னை எதிர்த்தவர்களை துவம்சம் செய்திருப்பார். இதை பதவியேற்ற ஒரு சில நாட்களில் மைத்திரியும் கூறியிருக்கின்றார்.

ஆக, நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும், ஜனாதிபதியின் உயிரையும் காப்பாற்றியவர்கள் தமிழர்கள். அப்படியாயின் அவர், முதற்கண் தமிழ் மக்களுக்குத் தானே உதவியிருக்க வேண்டும்.

ஆட்சி மாறியவுடன், தமிழ் மக்களுக்கு சாதகமாக மைத்திரி செயற்பட்டால் சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என வாசகர்கள் யாரேனும் கேட்டால்? பதில் மைத்திரிபால சிறிசேனவின், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளித்து உரையாற்றியமையை எடுத்துக்காட்டலாம்.

அதில் அவர், நாங்கள் நாட்டையும், இராணுவத்தினரையும், காப்பாற்றியிருக்கின்றோம். இலங்கையை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றியிருக்கிறோம். பலரின் பெயர்கள் வெளிவராமல் தடுத்திருக்கின்றோம்.

அதாவது, நாங்கள் தமிழர்களைக் கொன்று குவித்த இராணுவத்தினரைக் காப்பாற்றி இருக்கின்றோம், இராணுவத்தினருக்கு ஆணை பிறப்பித்த மகிந்த, கோத்தபாய, சரத்பொன்சேகாவின் பெயர்களை வரவிடாமல் தடுத்திருக்கின்றோம்.

ஏன் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவிடாமல் முற்றிலுமாக தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.

தான் தோற்று இருந்திருந்தால் மரணத்தைப் பரிசாக வழங்கும் மகிந்தரைக் காப்பாற்றியிருப்பதாக பேசியிருக்கின்றார் நல்ல மனிதர் என்று இன்று ஒரு சிலரால் சொல்லப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரி.

இது தான் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் நடந்து கொள்ளும் விதம். இதற்கு மேல் இன்னொன்றும் உள்ளது. நல்லாட்சியை அமைத்த நாளில் இருந்து இன்றுவரைக்கும், பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் இன்றும் சிறைவாசம் மீளவில்லை.

நிறைவேற்று முறை ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றவருக்கு, பயங்கரவாதச் சடைத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தி அதனை இல்லாது செய்து தமிழ் இளைஞர்களை மீட்டுக் கொடுக்க முடியவில்லை.

உண்மையில், நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றதெனில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்ட அதே நேரம், தமிழ் மக்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராகவும் ஜனாதிபதியும் பிரதமரும் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அது தொடர்பாக அவர்கள் இம்மியும் வாய்திறக்கவில்லை. ஆனால் தன்னை ஆதரித்தவர்களுக்கு மட்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தான் இலங்கையின் நிதர்சனம். ஆட்சிப்பீடம் யார் ஏறினாலும் சிங்கள விசுவாசம் அவர்களை ஆட்கொள்ளும். அவர்கள் பௌத்தத்தை காப்பாற்றுவார்கள்.

சிங்கள தேசத்திற்கும், பௌத்த பீடத்திற்கும் அயராது உழைத்தவர்கள் கொலை செய்தாலும், கொள்ளையடித்தாலும் அவர்களை காப்பாற்றுவார்கள். தவிர வேறு எதுவுமே செய்யமாட்டார்கள்.

தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை இலங்கை அரசாங்கத்திடம் நல்லதொரு பாடத்தினைக்கற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் மீளவும் பின்னோக்கி நகர்ந்து விட்டது.

மறுபடியும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் போல் உள்ளது. ஏனெனில் சிங்களம் வெற்றி வாகை சூடி உலக நாடுகளை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டுவிட்டது.

இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த உலக நாடுகளும், இலங்கை அரசாங்கம் சொல்வதை கேளுங்கள். அடம்பிடிக்காதீர்கள் என்று தமிழ்த் தலைமைகளுக்கு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எஸ்.பி. தாஸ்

-http://www.puthinamnews.com

TAGS: