சனா: உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் நிதி நெருக்கடியால் தீவிரவாதிகளுக்கான ஊதியத்தை குறைத்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் கொடிகட்டிப் பறக்கும் ஐஎஸ்ஐஎஸ் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பு ஆகும். வங்கிகளை கொள்ளையடிப்பது, எண்ணெய்யை திருடுவது, மக்களை கடத்தி விற்பனை செய்வது ஆகியவற்றை செய்து பணம் சம்பாதித்து வருகிறது அந்த அமைப்பு. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தலைமையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் தீவிரவாதிகளால் முன்பு போன்று சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனால் அந்த அமைப்புக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியால் தீவிரவாதிகளின் சம்பளத்தை அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி வெகுவாக குறைத்துள்ளார். கடந்த மாதம் வரை தீவிரவாதிகளுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் ரூ.6 ஆயிரத்து 500 தான் வழங்கப்படுகிறது.
இத்தனை நாட்கள் ஊதியம், போனஸ் இன்னும் பிற சலுகைகள் என்று சொகுசாக வாழ்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சம்பள குறைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 200 பேர் அமைப்பில் இருந்து விலகியுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஒரேயடியாக சம்பளத்தை குறைத்துள்ளதால் தீவிரவாதிகள் அந்த அமைப்பில் இருந்து விலகி பிற அமைப்புகளில் சேர்ந்து வருகிறார்கள்.