பல்மைராவின் தொல்லியல் சின்னங்கள் தொடர்ந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் அழிப்பு
சிரியாவின் வட பகுதியில் இருக்கும் தொன்மையான நகரான , பல்மைராவில் மற்றுமொரு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்த்துவிட்டதாக அதிகாரிகளும், உள்ளூர் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
“வெற்றி வளைவு” எனப்படும் இந்த நினைவு மண்டபம் அந்த நகரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகளால் தகர்த்துப் பொடிப்பொடியாக்கப்பட்டதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் பல்மைரா தொல்லியல் ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நினைவு மண்டபம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஐ.எஸ் அமைப்பின் போராளிகள் ஏற்கனவே இந்த இடத்தில் இரண்டு தொன்மை வாய்ந்த கோவில்களை அழித்துவிட்டனர். இந்த இரு கோயில்களும் யுனெஸ்கோ அமைப்பால் புராதன உலகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலாசார மையங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன.
இந்த சின்னம் அழிக்கப்பட்டது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படும் என்று யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஐரினா போக்கோவா கூறினார்.
ஐ.எஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைகள், அது சிரியா குறித்த அறிவு, அடையாளம் மற்றும் வரலாற்றை சிரிய மக்களுக்கு தர மறுக்கும் செயல் என்று அவர் கூறினார்.
ஐ.எஸ் அமைப்பு இந்த மாதிரி கோயில்கள் மற்றும் சிலைகள் எல்லாம் உருவ வழிபாட்டை ஊக்குவிப்பவை, அவை அழிக்கப்படவேண்டும் என்று நம்புகிறது.
ஆகஸ்டு மாதத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரபல புராதன கோயிலான பாலஷமின் கோயிலை அழித்தது. -BBC
அழிப்பதற்கு என்றே பிறந்தவர்கள் ” அவர்கள் “