ஒருமித்த நாட்டிற்குள் தீர்வை பெறத் தயாராகவுள்ளோம்!- இரா.சம்பந்தன்

r_sambanthan_001நாட்டை பிரிக்கும்படியான தீர்வை   நாங்கள் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டிற்குள் சமமான அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்க தயாராக இருக்கின்றோம் என்றுதான் கூறிவருகிறோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட போது இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரையின் முழுவடிவம்!

எங்களுடைய அலுவலகத்தில் இன்று என்னை வரவேற்றுள்ளீர்கள். இன்றைக்கு எனக்குக் காட்டியிருக்கின்ற அன்பு நாங்கள் தமிழரசுக் கட்சியை சார்ந்தவர்கள், ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

என்னவாக இருந்தாலும் எமக்கிடையில் ஓர் பிணைப்பு இருக்கும். ஏனெனில் ஒரு கட்சியை சார்ந்தவர்கள், அக்கட்சியை மதிக்கின்றவர்கள், நேசிக்கின்றவர்கள் அக்கட்சியின் தலைமை மீது நம்பிக்கை வைக்கின்றவர்கள் எமது மக்களுடைய எதிர்காலம் அந்த கட்சியின் செயற்பாட்டில் தங்கியிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

அந்த காரணத்தின் நிமித்தம் எங்களுக்குள் இடையில் ஒரு பிணைப்பு எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த காரணத்தின் நிமித்தம் தான் நீங்கள் தூண்டப்பட்டிருக்கின்றீர்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாடவும் இல்லை. ஆனால் மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளித்த முடிவின் அடிப்படையில் நாடுபூராகவும் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் அடிப்படையில் அந்தப் பதவிக்கு எமக்கு உரிமை இருந்தது.

காரணம் என்னவெனில் ஒரு கட்சி கூடுதல் ஆசனம் பெற்ற கட்சி நாட்டில் ஆட்சியமைத்தது. இரண்டாவதாக கூடுதல் ஆசனம் பெற்ற கட்சி. ஒரு பகுதியினர் முதல் கட்சியுடன் சேர்ந்து அமைச்சர் பதவியை ஏற்று அந்த அரசாங்கத்தில் அவர்களும் பங்காளிகளாக வந்தார்கள்.

அவ்விதமாக அவர்கள் பங்காளிகளாக வந்த பிறகு அக்கட்சியை சார்ந்த ஒருவர் இன்னுமொருவர் அவர் அரசாங்கத்துடன் சேராமல் எதிர்வரிசையில் இருந்தாலும் கூட உத்தியோகபூர்வமாக தாங்கள் தான் எதிர்க்கட்சி என கூறமுடியாத நிலையில் தான் மூன்றாவது கட்சியான எமக்கு அந்த உரிமை கிடைத்தது.

அது மக்களுடைய வாக்குகளினூடாக எமக்குக் கிடைத்த உரிமை. அந்த மூன்றாவது கட்சியின் தலைவராக பாராளுமன்றக் குழுக்களின் தலைவராக நான் தெரிவுசெய்யப்பட்டதன் நிமித்தம் அந்த பதவி எனக்கு உரித்தானது.

அந்த அடிப்படையில் தான் அந்த பதவியை ஏற்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதற்கு மேலதிகமாக இதைப்பற்றி கூறவேண்டிய அவசியம் இல்லை.

நாங்கள் எதிர்க்கட்சியாக, விசுவாசமாக செயற்படுவோம். அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய விடயங்களில் எதிர்ப்போம். ஆனால் நாங்கள் பல அனுபவங்களை விசேடமாக எமது மக்கள் அனுபவித்திருக்கின்றார்கள்.

முந்தைய அரசாங்கத்தின் கீழ் அவர்களில் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். அவர்களுடைய செயற்பாட்டையும் அவதானித்து பார்க்காமல் இருக்க முடியாது.

சில மாற்றங்களை நாங்கள் அவதானிக்கின்றோம்.

பல கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கின்றன. பல கருமங்கள் நிறைவேற்றப்படவில்லை. இருந்தபோதும் நாங்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆட்சிமாற்றம் ஆரம்பித்தது தை மாதத்தில். ஜனாதிபதி பதவி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தை மாதம் தொடக்கம் ஆவணி மாதம் வரையில் அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்கமாக இருந்தது.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மை இருக்கவில்லை. அவர் சிறுபான்மை அரசாங்கத்தை நடத்திவந்தார். அவரால் பல கருமங்களை நிறைவேற்ற பல தடங்கல்கள் இருந்தன. தற்போது அவர் பெரும்பான்மை அரசாங்கத்திற்கு தலைமை தாங்கி பிரதமர் பதவியில் இருக்கின்றார். ஆனால் இனிமேல் தாமதம் இல்லாமல் எமது மக்களினுடைய கருமங்கள் நிறைவேற்றவேண்டிய தேவை நிச்சயமாக ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 9 மாதங்களாக இருந்து வந்த நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவர்களுடைய அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறது. தமிழ் மக்களுடைய உடனடிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் கையாளும் முறைகள், விதங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. அவர்களுடைய சிந்தனைகள் வேறுவிதமாக இருக்கின்றன. ஆதலால் அந்த வித்தியாசத்தை உணர்ந்து செயற்படவேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த காரணத்தின் நிமித்தம் நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றோம் என்று கூறமுடியாது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம் என்று கூறமுடியாது. ஆனால் அதே சமயத்தில் எமது கருமங்களை, உடனடி தேவைகளை அல்லது அரசியல் தீர்வை நிறைவேற்றுவதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்றால் நாங்கள் பின்னிற்க முடியாது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும் நாங்கள் அதனைச் செய்வோம்.

இதை நாங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நாங்கள் எல்லோரும் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். ராஜபக்சவின் ஆட்சி இந்த நாட்டில் இருந்த போது எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. எமது எதிர்காலம் எவ்விதமாக அமையப் போகின்றது என்பது பற்றி நாங்கள் எவரும் எதையும் கூறமுடியாத நிலைமை இருந்தது.

ராஜபக்சவை பொறுத்தவரையில் தமிழ் இனத்தை பலவீனப்படுத்தி பொருளாதார ரீதியாக, சமூகரீதியாக, கலாசார ரீதியாக இயன்ற அளவிற்கு நாட்டில் இருந்து வெளியேற்றுவது அல்லது பலவீனப்படுத்தி செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்துவதாகத் தான் அவர்களுடைய செயற்பாடுகள் இருந்தன என்பது என்னுடைய கருத்து.

அவர் பல திட்டங்களை தீட்டி செயற்பட்டார். இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் முழுமையாக இருக்க வேண்டும். அவர்களுடைய விருப்பத்தின்படி எல்லாக் கருமங்களும் இடம்பெறவேண்டும். மற்றவர்கள் இந்த நாட்டில் விரும்பினால் வாழலாம். அவர்கள் உரிமைகளைப் பற்றி பேசாமல் வாழ விரும்பினால் வாழலாம். எங்களுடைய நிபந்தனையின் அடிப்படையில் தான் என்பது அவர்களுடைய கோரிக்கை.

அவர் நினைத்தார் அவ்வாறு பின்பற்றுவதன் மூலம் கட்சியில் தொடர்ந்தும் இருக்கலாம் என்று. துரதிஷ்டவசமாக அவருடைய கட்சிக்குள் இருந்த ஒருவர் வெளியேறி அவரை எதிர்த்த காரணத்தின் நிமித்தம் அவருடைய அந்த சிந்தனை பலிக்கவில்லை. சிறுபான்மை மக்கள் விசேடமாக தமிழ் மக்கள் தேர்தலில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

ஜனாதிபதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. புதிய அரசு பதவி ஏற்றிருக்கிறது. அதில் கூடுதலாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் இணைந்து இருக்கின்றார்கள். அந்த வகையில் அது கூட்டாட்சியாக இருக்கின்றது.

இருந்தபோதும் அந்த இரு பகுதியினரும் ஒன்றாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறவில்லை. எம்முடைய வாக்குகளுடன் பெரும்பான்மை பெறக்கூடிய நிலைமை இருக்கின்றது.

ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் மேலும் பலப்படுத்துதலின் ஊடாக பெரும்பான்மை பெறக்கூடிய நிலைமை இருக்கின்றது. ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் மேலும் பலப்படுத்தலாம். பலப்படுத்துவதன் ஊடாக பெரும்பான்மை சற்று அதிகரிக்கலாம். அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் சம்பந்தமாக அடையக்கூடிய நிலையில் இருக்கின்றது.

இது எம்மை பொறுத்தவரையில் ஒரு சந்தர்ப்பம்.

அம்மையார் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் 1994ம் ஆண்டு அவர்கள் அரசியல் சாசன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தி தமிழருடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண முயற்சித்தபோது அவரிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியை நம்பவேண்டிய தேவை இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அந்த ஆதரவை வழங்கவில்லை. அதனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறமுடியாமல் இருந்தது. தற்போது அந்த நிலைமை இல்லை.

ஆனால் அரசியல் சாசன ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் அந்த மாற்றங்களை நான் கூறிய கட்சிகள் ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு பிரிவு நாங்களும் சிறுபான்மைக் கட்சிகளும் அந்த மாற்றங்களை ஏற்படுத்தும் கருத்தியலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அத்தியாவசியம்.

ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கப்போகின்றோம் என இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. இந்தக் கருத்தை ஜனாதிபதி, பிரதமர் கூறி இருக்கின்றார்கள். பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக அரசியலை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறிக்கொண்டு வருகின்றார்கள்.

அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். தேர்தல் முறைகள் சம்பந்தமாக மாற்றங்கள் ஏற்படவேண்டும். தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக, ஆட்சி அதிகாரங்கள் சம்பந்தமாக மாற்றங்கள் ஏற்படவேண்டும். தகவல் அறியும் உரிமை தொடர்பில் மாற்றம் ஏற்படவேண்டும். ஜனாதிபதி நிர்வாக அதிகாரம் தொடர்பில் மாற்றமடைய வேண்டும் என்ற பலவிதமான கருத்துக்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

எம்மைப் பொறுத்தவரையில் இந்த சூழல் முக்கியமானது. தேசியப் பிரச்சினை சம்பந்தமாக ஏற்படவேண்டிய மாற்றங்கள், சாட்சி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பிலான மாற்றங்கள் இவை எம்மைப் பொறுத்தவரையில் முக்கியமான கருமமாக கருதுகின்றோம். இதனை அடைவதற்கு நான் முன்பு கூறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்துவது நாங்கள் கையாள வேண்டிய முறை என்று கருதுகின்றேன்.

சந்திரிகாவின் காலத்திற்குப் பிறகு இவ்விதமாக சூழல் இருக்கவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. அல்லது ஆட்சியில் இருந்தவர்கள் எதனையும் நிறைவேற்ற விரும்பவில்லை. தற்போது நிலைமை மாறியிருக்கின்றது. ஆட்சியில் இருக்கின்றவர்கள் சில கருமங்களை நிறைவேற்றுவதற்கு விருப்பமாக இருக்கின்றார்கள்.

அவற்றை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறக்கூடிய நிலைமை இருக்கின்றது. அதனடிப்படையில் அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், வல்லமையின் அடிப்படையில் தேசிய பிரச்சினை உள்ளடக்கமாக அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அதனை பயன்படுத்தத் தக்க தீர்வாக அமைய வேண்டும்.

அவ்விதமாக அமைந்தால் தான் தங்களுடைய உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அவர்களுக்கு தீர்வு கிடைத்ததாக கருதப்படும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அவ்விதமாக தீர்வு ஏற்படவேண்டும்.

பல்வேறு கருத்துக்களை பல்வேறு அரசியல்வாதிகள் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறிவரலாம். அது அரசியலில் சகஜம். ஆனால் பேசுகின்ற போது என்ன அடிப்படையில் நாங்கள் பேச வேண்டும் என்பது பற்றி எங்களுக்குள் தெளிவு இருக்கவேண்டும். இதனை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். எமது மக்களுடைய கருமங்களில் அவர்கள் தங்கள் இறைமையின் அடிப்படையில் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய வல்லமை அரசியல் சாசனத்தில் ஊடாக உருவாக வேண்டும்.

காணி சம்பந்தமாக, பாதுகாப்பு சம்பந்தமாக சட்டம், ஒழுங்கு கல்வி, உயர்கல்வி சம்பந்தமாக விவசாயம், நீர்ப்பாசனம், கைத்தொழில் சம்பந்தமாக, கடற்றொழில், கால்நடை வளர்ப்பு, போக்குவரத்து, கலாசாரம், பொருளாதாரம் ஏனைய விடயங்கள் சம்பந்தமாக அதிகாரிகளின் நிறைவேற்றக்கூடிய வகையில் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவதற்கு போதிய பணத்தை வசூல் செய்யக்கூடிய அதிகாரங்கள், நன்கொடைகளை பெறுவதற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடன்களைப் பெறுவதற்கு, முதலீடுகளை பெறுவதற்கு அதிகாரங்கள் இருக்கவேண்டும். அவ்விதமான முழுமையான தீர்வு ஏற்படவேண்டும்.

நாட்டை பிரிக்கும்படியாக நாங்கள் கேட்க வில்லை. ஒருமித்த நாட்டுக்குள் இவ்விதமான தீர்வை ஏற்க தயாராக இருக்கின்றோம் என்றுதான் கூறிவருகிறோம்.

ஆரம்பத்தில் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது ஒருமித்த நாட்டிற்குள் சமமான அடிப்படையில் தான் ஒரு தீர்வை கேட்டார். நாட்டை பிரிக்கும் படியாக தீர்வைக் கேட்கவில்லை. 1970 ஆண்டு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாக கூறியிருந்தோம்.

நாட்டை பிரிக்கும் படியாக கோரும் எந்த ஒரு வேட்பாளரையும் மக்கள் ஆதரிக்கக்கூடாது. அவர்களை நிராகரிக்க வேண்டும். தோற்கடிக்கப்படவேண்டும் எனக் கூறியிருந்தோம். அவ்விதமாக போட்டியிட்டவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். நாங்கள் ஒருமித்த நாட்டுக்குள் தான் அரசியல் தீர்வைக் கோரினோம். 70ஆம் ஆண்டு தேர்தலில், தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறினோம்.

72ம் ஆண்டு அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட போது எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாகத் தான் தந்தை செல்வா காங்கேசன்துறை தொகுதியை இராஜினாமா செய்து மீண்டும் வெற்றிபெற்றார். 76ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 77ம் ஆண்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டோம்.

ஆனால் சர்வதேச தலைவர்களுக்கும் எமது தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் விசேடமாக இந்திரா காந்தி அம்மையாருக்கும் அண்ணன் அமிர்தலிங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இருந்து மாறி நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஏற்படுமானால் அதனை பரிசீலிக்கலாம் என்ற முடிவை எடுத்தோம். அதை எம் மக்கள் முன்வைக்க தயார் என்ற கருத்தை முன்வைத்தோம்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் அவ்விதமான நிலைமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். அவர்களுடைய தனித்துவம் பேணப்படவேண்டும். இரண்டு மாகாணங்களும் ஒன்றாக இணைந்து அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் போன்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து அவ்விதமான தீர்வை என்ன மாதிரி ஏற்படுத்தலாம் என்ற தீர்வுக்கு வந்திருக்கின்றோம். ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் பல்வேறு பாராளுமன்றத் தெரிவுக்குழு காலத்தில் பல்வேறு அறிக்கைகள், பல்வேறு நிபுணர்குழு அறிக்கைகள் எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன ஆதலால் ஓர் அரசியல் தீர்வு சம்பந்தமாக மிகவும் ஆழமாக பல விடயங்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றோம்.

நான் கூறிய மாதிரியான அரசியல் தீர்வு உலகில் பல்வேறு நாடுகளிலும் அவர்களின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நிலவி வருகின்றன. ஆகையால் எல்லோரும் விசுவாசமாகச் செயற்பட்டால் அவ்விதமான அரசியல் தீர்வு பெறுவது முடியாத காரியமல்ல. அவ்விதமான அரசியல் தீர்வை நாங்கள் ஏற்படுத்தலாம். ஆனால் எல்லோரும் ஒரு தீர்வைக் காணவேண்டும்.

அமுல்படுத்தக்கூடிய தீர்வு, நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு, ஒரு உறுதியான தீர்வைக் காணவேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரும் செயற்படவேண்டும் அந்தவகையில் நாங்கள் செயற்படத் தயாராக இருக்கின்றோம். மற்றவர்களும் செயற்படத் தயாராக இருக்கவேண்டும்.

இது முக்கியமான காலகட்டம். இந்த விடயம் சம்பந்தமான கருமங்கள் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படலாம். அவ்விதமாக தற்போது சிந்தனைகள் உள்ளன. இந்தத் தருணத்தில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் வேறுபட்ட கருமங்களை ஆற்றிக்கொண்டு இருக்கமுடியாது. எமது ஒற்றுமையை நாங்கள் பேணி பாதுகாக்க வேண்டும்.

சர்வதேச சமூகத்தினுடைய கணிப்பின் பிரகாரம் தமிழ் மக்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை ஒரு மித்த நாட்டிற்குள் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள் என்ற கருத்து நிலவ வேண்டும்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபைகள் மனித உரிமைப் பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனைப் பற்றி அதிகம் பேச வேண்டிய தேவையில்லை. ஆனால் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் அந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த கருமம் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் மேற்பார்வையில் இருக்கும் 32ம் அமர்வின் போது இந்தத் தீர்மானம் தொடர்பில் நிறைவேற்றம் சம்பந்தமாக வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும். 34ஆம் அமர்வில் எழுத்தில் தீர்மானம் நிறைவேற்றல் சம்பந்தமாக ஒரு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை அமெரிக்கா, இந்தியா, ஜக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகள் உட்பட எல்லா நாடுகளும் ஆதரிக்கின்றன. அதை இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆகையால் அது பலம்வாய்ந்த தீர்மானமாக இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்;முன்னெடுக்கவேண்டும். சர்வதேச உதவியை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்கிறது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் நியாயமான போக்கில் செல்லத் தயாராக இருக்கின்றார்கள்.

அதைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது எமது கடமை. இவற்றையெல்லாம் ஏன் கூறுகின்றேன் என்றால் எங்கள் மத்தியில் நாங்கள் கட்சிக்குள்ளேயே பேசிக் கொள்ளவேண்டிய விடயங்களை பகிரங்கமாக வெளியில் பேசுவது ஓர் அர்த்தமற்ற செயல் என நான் கருதுகின்றேன்.

அவ்விதமாக நாங்கள் செயற்படுவதன் காரணமாக நீண்டகாலம் பலவிதமான துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கி வந்த எமது மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் கூட அதை இழக்கக்கூடிய ஒரு நிலைமையை அவ்விதமாக செயற்படுத்துவதன் மூலம் இடம்பெறலாம் என்ற காரணத்தின் நிமித்தம் அதை தவிர்க்க வேண்டும் என நினைக்கின்றேன்.

இவற்றை எல்லாம் நாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். ஒன்றாக சிந்திக்கவேண்டிய விடயங்கள் பல உள்ளன. எமது கட்சிக்குள் எதையும் பேசிக்கொள்ளலாம். எமக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் கட்சிக்கு வெளியில் பகிரங்கமாக பேசி குழப்பங்களை ஏற்படுத்துவது உகந்த விடயமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

நாங்கள் ஒரு கூட்டமைப்பாக செயற்படுகின்றோம். நாங்களும் கட்சி என்ற ரீதியில் இவற்றை உணர்ந்து செயற்படுவது அத்தியாவசியம் என்று கருதுகின்றேன்.

இந்தப் பின்னணியில் தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதை பலப்படுத்துவதற்கு நாங்கள் எல்லோரும் எங்களுடைய பங்களிப்பை செய்யவேண்டும். 2016ஆம் ஆண்டு ஓர் தீர்வு ஏற்பட வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பை நிறைவேற்றுவதில் எங்களுக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது. பங்களிப்பைச் செய்யவேண்டும். அதில் நாங்கள் தவறக் கூடாது.

நாங்கள் தேவையாக இருந்தால் அடிக்கடி கூடிப்பேசலாம். பேசவேண்டிய தேவை ஏற்படும். பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட பிறகு எமது உறுப்பினர்களுடன் கருத்துக்களை பரிமாற வேண்டிய தேவை ஏற்படும். அதை நாங்கள் பயன்படுத்த வேண்டும். அவ்விதமாக நாங்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: