திசை திருப்பப்படுகிறதா போர்க்குற்ற விசாரணை?

channel-4விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரின் போது போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் இத்தகைய குற்றங்களில் இரண்டு தரப்புகளும் ஈடுபட்டுள்ளதாகவும் ஐநா விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ள நிலையில் இராணுவத்துக்கு எதிரான விசாரணை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று அறிக்கைகள் மூலமும் வாய்மொழியாகவும் சர்வதேச அரங்கில் நிரூபிக்க அரசாங்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போயுள்ளன.

இப்போது போர்க்குற்றச்சாட்டுகளை அரச படைகளும் விடுதலைப் புலிகளும் எதிர்கொண்டிருக்கிறார்கள். கூடுதலான போர்க்குற்றச்சாட்டுகள் படையினர் மீதே சுமத்தப்பட்டுள்ளன. இத்தகைய கட்டத்தில் ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய அரசாங்கம் ஒரு நம்பகமான விசாரணைப் பொறிமுறையை அமைக்க உடன்பட்டிருக்கிறது.

நடக்கப் போவது உள்ளக விசாரணையா? என்பது இன்னமும் உறுதியாகாத நிலையில் கூட இந்த விசாரணைகளில் குற்றம் சாட்டப்படும் ஒரு தரப்பாக இராணுவமே இருக்கப் போவது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு பல ஆதாரங்களும் சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை முறையான நீதிமன்றப் பொறிமுறையின் ஊடாக விசாரித்தால் அவற்றை போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று நிரூபிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இராணுவத்தினர் குற்றம் செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதே  முன்னைய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டால் அவர்களைத் தண்டிக்கவும் தயார் என்று இப்போதைய அரசாங்கம் கூறுகிறது.

ஆனாலும் ஒட்டுமொத்த இராணுவக் கட்டமைப்பையும் போர்க்குற்றச்சாட்டில் இருந்து பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

பாதுகாப்பு வலயம் மீதான குண்டுத் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமற்போகச் செய்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட இராணுவத்தினருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே திட்டமிட்ட குற்றங்களாக ஏற்றுக்கொள்ள அரசாங்கமோ இராணுவத் தரப்போ தயாராக இல்லை.

இவை இராணுவத்தின் போர் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் நிகழ்ந்த உதிரிகளான சில சம்பவங்களாக அடையாளப்படுத்தவே இராணுவமும் அரசாங்கமும் முயற்சிக்கின்றன.

இத்தகைய சம்பவங்களில் படைத்தரப்பில் உள்ளவர்கள் தொடர்புபட்டுள்ளதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டுள்ள சூழலில் இதனை முற்றாக நிராகரிக்க முடியாத கட்டத்துக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் இலங்கையின் இராணுவக் கட்டமைப்பையும் அதன் புகழையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமக்கிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது.

இந்த இடத்தில் தான் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நிற்காமல் இராணுவத்தைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கிறது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்தநிலையில் இராணுவக் கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசாங்கம் அதேநேரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான விசாரணைகளை நடத்தவும் வேண்டிய கடப்பாட்டில் இருப்பதையும் மறுக்க முடியாது.

இந்தக் கட்டத்தில் தான் குற்றச்சாட்டுகளை இராணுவக் கட்டமைப்புக்கு எதிரான தவறுகளாகச் சுட்டிக்காட்டாமல் தனிநபர்களின் தவறுகளாக மாற்றிக் கொள்ளும் உத்தியை அரசாங்கம் கையாள எத்தனிப்பதாக தெரிகிறது.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு தனிநபர்களின் மீது அல்லது சிறிய குழுவினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் தாம் நியாயமாக நீதியாக நடந்து கொள்வதாக அரசாங்கத்தினால் காட்டிக் கொள்ள முடியும்.

நீதியான விசாரணை நடக்கிறது என்று உலகத்தை நம்ப வைக்க அது போதுமானதாக அமையும்.

ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் நிறுவன மயப்படுத்தப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட போர் ஒன்றே தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டது என்று உறுதியாக நம்புகின்றனர்.

இதில் இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று என்பதே தமிழர் தரப்பின் வாதம் நம்பிக்கை. அதுவே உண்மையும் கூட.

இத்தகைய நிலையில் போர்க்காலத்தில் நிகழ்ந்த மீறல்கள், குற்றங்களை தனிநபர்களின் ஒழுக்க மீறல்களாகவோ உதிரிகளான மீறல் சம்பவங்களாகவோ அரசதரப்பு அடையாளப்படுத்தும் ஆபத்து ஒன்று உள்ளது.

அவ்வாறான நிரூபணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டால் அது தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட இனஅழிப்பு இடம்பெற்றது. இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும்.

உருவாக்கப்படப் போகும் விசாரணைப் பொறிமுறையில் வழக்குத் தொடுநர்களாக உள்நாட்டவர்களே ஈடுபடுத்தப்பட்டால் அரசதரப்பு நிச்சயம் இவ்வாறு நிரூபிப்பதற்கான உத்தியைக் கையாளும் என்பதில் சந்தேகமில்லை.

போர்க்குற்றங்களை அரச படைகளில் உள்ள தனிநபர்களின் குற்றங்களாக அடையாளப்படுத்துவதன் மூலம் பொதுவாக எல்லா படை அமைப்புகளிலும் காணப்படும் ஒழுக்க மீறல்கள் தான் என்றும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் அல்ல என்றும் உறுதிப்படுத்தப்பட்டு விடும்.

அரசாங்கத் தரப்பின் கருத்துக்களை பார்க்கும் போது இத்தகையதொரு திசையில் தான் விசாரணைகளை நகர்த்த முனைவதாகத் தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்துவது போல கடந்த வியாழக்கிழமை அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட்ட கருத்து அமைந்துள்ளது.

அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பினும் இது முக்கியமான ஒரு விடயம்.

மகிந்த சமரசிங்க மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கத்தையும் படையினரையும் பாதுகாக்கின்ற பொறுப்பை வகித்து வந்தவர் இன்னமும் வகித்து வருபவர் என்பதால் அவரது கருத்து முக்கியமானது.

போர் விதிமுறைகளை மீறி எவரேனும் செயற்பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை, போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்களை கொலை செய்யவோ அல்லது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவோ படையினர் தீர்மானம் எடுத்திருக்கவில்ல. அவ்வாறு தீர்மானங்களுக்கு புறம்பான வகையில் எவரேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் அவ்வாறான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்று அவர் கூறியிருந்தார்.

இதன் மூல் கூறப்படும் செய்தி என்னவென்றால் இராணுவம் திட்டமிட்ட போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை பொதுமக்களைத் திட்டமிட்டு தாக்கவில்லை திட்டமிட்ட படுகொலைகளை செய்யவோ காணாமற்போகச் செய்யவோ பாலியல் குற்றங்கள், சித்திரவதைகளில் ஈடுபடவோ இல்லை என்பதுதான்.

இவையெல்லாம் எங்கேனும் ஒன்று எதேச்சையாக நடந்திருக்கலாம். அத்தகைய குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றே அவர் கூற வந்திருக்கிறார்.

இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினது நிலைப்பாடு மட்டுமல்ல தற்போதைய அரசாங்கத்தினது நிலைப்பாடும் இதுதான்.

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தையும் அதன் பெயரையும் பாதுகாப்பது தான். இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரல்.

இதற்காக சில இராணுவத்தினர் அதிகாரிகள் மட்டுமன்றி முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களும் கூட பலிக்கடாக்களாக்கப்பட்டக கூடும்.

இலங்கை இராணுவத்தின் புகழைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்து இப்போது அடிக்கடி பேசப்படுகிறது.

இன்று சர்வதேச அரங்கில் இலங்கை இராணுவத்தின் மீது கறை ஏற்பட்டு விடாமல் காப்பாற்றுவதற்கான முயற்சி.

அவ்வாறாயின் தனது கட்டளையின் கீழ் இயங்கும் படையினர் குற்றமிழைக்கும் போது அதில் கட்டளை அமைப்புக்குப் பொறுப்பு இல்லையா? என்ற கேள்வி எழும்.

நிச்சயமாக தனது படை அமைப்பிலுள்ளவர்களை ஒழுக்கத்துடன் செயற்பட வைத்தலும், மீறல்களில் ஈடுபடும் போது அவர்களைத் தண்டித்தலும் ஒரு இராணுவக் கட்டமைப்பின் பொறுப்பாகும்.

இந்த இரண்டையும் இலங்கையின் இராணுவக் கட்டமைப்பு செய்யவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010ம் ஆண்டு விசுவமடுவில் ஒரு பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி மற்றொரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய நான்கு படையினருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய படையினரே அவர்களை வல்லுறவு புரிந்து பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியுள்ளதாலும் நாட்டின் இராணுவத்தின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் அதிகபட்ச தண்டனை வழங்கியிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குற்ப்பிட்டுள்ளார்.

அத்துடன் படையினரின் வல்லுறவுக் குற்றங்கள், சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றங்களாக கருதப்படுபவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னரே போர்க்குற்றங்கள் வடக்கு கிழக்கில் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அவரது தீர்ப்பு மறைமுகமாக சுட்டி நிற்கிறது.

அதேவேளை, இந்த தீர்ப்பு இராணுவத்தின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்ற வகையில் படையினரின் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

இது போர்க்குற்ற விசாரணையாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தாலும் போர்க்கால மீறல்கள் அனைத்தையும் இதுபோன்று நிரூபிக்க போதிய சாட்சியங்களோ சான்றுகளோ கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

இவ்வாறான நிலையில் தனிநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்பது இலகுவாக நிரூபிக்கப்பட முடியாமல் போகவும் வாய்ப்புக்கள் உள்ளன.

போர்க்குற்றங்களுக்கு ஒட்டுமொத்த இராணுவக் கட்டமைப்பே அதற்கு கட்டளையிட்டவர்களே பதில்கூற வேண்டும். பொறுப்புக்கூற வேண்டும். என்ற நிலை ஏற்படுத்தப்படாது போனால், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களைக் காப்பாற்றுவதற்கான விசாரணையாகவே இது அமைந்து போகும்.

-சுபத்ரா

-http://www.tamilwin.com

TAGS: