போர்க்குற்றச் செயல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுடன் தொடர்புடையவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியனவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட உள்ளது.
இந்த விசாரணைப் பொறிமுறைமையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு உண்மை கூறுவோருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைப் பொறிமுறைமையின் முதல் கட்டமாக வழக்குத் தொடரக்கூடிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.
மதத் தலைவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கருணைச் சபையினால் மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
உண்மையை ஒப்புக்கொள்ளத் தவறுவோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-http://www.tamilwin.com

























