ஐ.நா. மனித உரிமை சபையின் 30வது கூட்டத்தொடரில், நாற்பத்தி ஏழு அங்கத்துவ நாடுகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம், நீர்த்துப் போயுள்ளதா என்ற கேள்வி உலகம் பூரவாகவும் பேசப்படும் விடயம்.
யார் யார் இவ் தீர்மானத்தை மிகச் சிறந்ததாகவும், நீர்த்துப் போயுள்ளதாகவும், நடுநிலையாகவும் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு நாம் முதலில் பதில் காண வேண்டும். இல்லையேல் இது ஓர் ஆக்க பூர்வமாக ஆய்வாக இருக்க முடியாது.
சிங்கள தரப்பில் முதலில் சிறிலங்கா அரசு இத் தீர்மானத்தை முற்றாக ஏற்க மறுத்தாலும் இறுதியில் இவர்கள் இதை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாது, தாங்களும் இப்பிரேரணையின் உப-அனுசரணையாளரானார்கள்.
ஆனால் சிறிலங்காவின் முன்னாள் ஜனதிபதி ராஜபக்சவும் அவரது அரசியல் சகாக்களும் இத் தீர்மானத்தை எதிர்த்து நிற்பது மட்டுமல்லாது, சிறிது சிறிதாக இப் பிரேரணைக்கு எதிரான ஆர்பாட்டங்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் சிங்கள தேசத்தில் ஆரம்பமாகியுள்ளன. இவையாவும் நாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையே.
தமிழர் தரபில், இறுதியாக நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்ற தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இவ் பிரேரணையில் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த பொழுதிலும், இதை ஏற்று கொண்டுள்ளனர்.
த.தே.கூ.பினர் இப் பிரேரணையை ஏற்றுக் கொண்டுள்ளனர் ஆகையால், இவர்களது நீண்டகால பகைமை கட்சியான, தமிழ் காங்கிரஸ் இப்பிரேணையை ஒரு பொழுதும் ஏற்கப்போவதில்லை என்பதை ஓர் பாலகனே அறிந்து கொள்வான்.
இதேவேளை தமிழ் காங்கிரசின் ஆதரவாளர்களான உணர்ச்சிவச அரசியல் பேசும் ஓர் சிறு விகிதாசாரத்தை கொண்ட புலம் பெயர் வாழ் தமிழர்களும் இப் பிரேரணையை எதிர்ப்பது ஓர் புதுமையான விடயம் அல்ல.
இப்பிரேரணையை எதிர்த்து கருத்து கூறும் உணர்ச்சிவச அரசியல் பேசும் புலம் பெயர் வாழ் தமிழர்கள் உட்பட பெரும்பாலானோர், கேள்வி ஞானத்திலேயே தமது கருத்துக்களை கூறுகின்றனர். இவர்கள் எவரும் இப் பிரேரணையை படித்து புரிந்து கொண்டவர்கள் அல்ல!
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் 261 பக்கங்களை கொண்ட அறிக்கை வெளியாகி இரண்டு மூன்று மணித்தியலங்களிற்குள், இதே பாணியிலேயே கேள்வி ஞானத்தில் ஊரிலிருந்து கருத்துக்கள் வெளியாகியிருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று வரை இப்பிரேரணையை எதிர்ப்பவர் யாரும், தமது நிலைபாட்டை சரியென நிரூபிப்பதற்கு இப் பிரேரணையை தமிழில் மொழி பெயர்த்து மக்கள் முன் வைக்கவில்லை. இதன் காரணமாக, என்னால் முடிந்த வரை, இப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை, தமிழில் மொழி பெயர்த்து இங்கு தருகிறேன். இம் மொழி பெயர்ப்பில் திருப்தி இல்லாதோர், சரியான முறையில் மொழிபெயர்த்து பிரசுரித்தால், நிச்சயம் யாவருக்கும் பயன் உள்ளதாகவிருக்கும்.
பிரேரணை தமிழில் கீழே கொடுக்கப்பட்டிருந்தாலும், இதை வாசிக்கும் சிலருக்கு, ‘சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல்’ காட்சியாளிக்கும். ஐ.நா.வின் பிரேரணை மட்டுமல்லாது, முக்கிய சர்வதேச நிறுவனங்களின் பிரேரணைகள் யாவும் இப்படியாக தான் வரையப்படுகிறது.
ஓர் பிரேரணையில், முதலில் முகவுரை (Preamble) பந்திகளும் இதனை அடுத்து நடைமுறை (Operative) பந்திகளும் கொடுக்கப்படுவது வழமை. இப்பிரேரணையில் எல்லாமாக இருபது நடைமுறை பந்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தான் இப்பிரேரணை எவற்றை செய்ய முனைகிறது அல்லது செய்ய வேண்டுமென முன் வைக்கிறது என்பதை நாம் அறியலாம். இவ் இருபது பந்திகளும் மிக முக்கியமானதாக இருந்த பொழுதிலும், இங்கு ஆறாவது பந்தியில் சர்ச்சைக்குரிய விடயத்திற்கு யாவரும் விடை காண முடிகிறது.
இதே போல், சர்வதேசம் தமிழர்களை ஏமாற்றியுள்ளதா? இத்துடன் பாதிக்கப்பட்ட தமிழர்களை சர்வதேசம் கைவிட்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு 18,19,20ம் பந்திகளில் விடைகள் உள்ளன.
எனது பார்வையில்
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஏமாற்றப்பட்டு வரும் ஈழத்தமிழர்களுக்கு உள்நாட்டு விசாரணை மூலம் நிச்சயம் நீதி கிடைக்க முடியாது! சர்வதேச விசாரணைக்காகவே நாம் எமது காலத்தை விரயம் செய்து வருகிறோம்.
ஆனால் நாம் வேண்டி நிற்கும் சர்வதேச விசாரணைக்கு ஐ.நா.மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளிடையே தற்போதைய நிலையில் எந்தவித ஆதரவும் இல்லை என்பதை இந் நாடுகளுடன் உரையாடியவர்கள் அறிந்திருக்க முடியும்.
இவ்வேளையிலே, அமெரிக்கா, பிரித்தானியாவின் தலைமையில், கலப்பு நீதிமன்றம் என்ற சொற்பதம் நீக்கப்பட்டு இதற்கு பதிலாக வேறு பதங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளது. இப் பிரேரணை சம்பந்தமாக நடைபெற்ற ஓர் கூட்டத்தில், ஐ.நா.வின் அமெரிக்க தூதுவர் கூறியதாவது, “கலப்பு நீதிமன்றம் என்ற சொற்பதம் பலரிடையே சர்ச்சைகளை உண்டுபண்ணும் காரணத்தினால், நாம் இந்த பதத்தை பாவிப்பதை தவிர்த்து, இதற்கு பதிலாக வேறு பதம் சேர்க்கவுள்ளோம்” என கூறியிருந்தார்.
பொதுநலவாயம் மற்றும் நீதிபதிகள், வழங்கறிஞர்கள், வழக்கு தொடுநர்கள் என பிரேரணையில் கூறப்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதேவேளை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் காரியாலயம் இப் பிரேரணையின் நடைமுறைப்படுத்தலை கண்காணிக்கவுள்ளார்கள் என்பதையும், இப் பிரேரணையை முன்னெடுத்த – அமெரிக்கா, பிரித்தானியா, மசிடொனியா, மொன்ரநீகிறோ ஆகிய நாடுகள் எமக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
இத்துடன் இப் பிரேரணை இன்னும் வலுவிழக்க அனுமதியாது இறுதிவரை விவாதம் செய்த முக்கிய நாடுகளான – சுவிட்ஸலாந்து, அயர்லாந்து, கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் மிகவும் கரிசனையாக இருந்தனர், தொடாந்தும் இருப்பார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்காக மற்றைய மேற்கு நாடுகள் எமது விடயத்தில் அக்கறை அற்றவர்களாக நாம் கணிக்கவும் முடியாது.
இதே இடத்தில், தமிழர்களாகிய நாம் இத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டோமோ இல்லையோ, இத் தீர்மானம் நிறைவேறியே தீரும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இச் சந்தர்ப்பத்தில் சரி இத் தீர்மானத்தை எதிர்ப்பவர்களால் என்ன செய்ய முடியும்? இவர்களால் பாதிக்கப்பட்டோருக்கு என்ன ஆறுதல் ஆலோசனை கூற முடியும்?
காலம் காலமாக சிறிலங்கா அரசு எமது பக்கத்திலேயே ‘பந்தை’ தட்டிவிட்டு, எங்களையே சர்வதேசத்திடம் குறை கூறிவருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததற்கும், மாவிலாறில் தண்ணீர் பிரச்சினைக்கும், ஓஸ்லோ ஒப்பந்தத்தம் போன்ற விடயத்திற்கு சர்வதேசம் இன்றும் எங்களையே குறை கூறும் அளவிற்கு சிறிலங்கா தமது இராஜதந்திரத்தை பாவித்து வருகிறார்கள்.
ஐ.நா. பிரேரணை விடயத்தில் தற்பொழுது, ‘பந்து’ சிறிலங்காவின் பக்கம் வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளது. இவ் அணுகுமுறையை விதண்டாவாதம் செய்பவர்களால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது. இப் பிரேரணையை எதிர்ப்பவர்களுக்கு தெரிந்த விடயம் என்னவெனில், பெருந்தொகை பணத்தை வீண் விரயம் செய்து, சர்வதேச அங்கீகாரம் அற்ற இடதுசாரிகளின் நீதிமன்றம் எனக் கூறப்படும், மாநாட்டில் சில இடதுசாரி புத்திஜீவிகள் மத்தியில் விசாரணைகளை மேற்கொள்வதே. இவற்றிற்கும் ஐ.நா.வின் அங்கீகாரமோ, அதனது அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரமோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
விவாதம்
தற்போதைய பிரேரணையை சிறிலங்கா அரசினால் ஒருபொழுதும் நடைமுறைப்படுத்த முடியாது என்பது தான் உண்மை. இதை சர்வதேசத்திற்கு நிரூபிப்பதற்கு கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை நாம் சரியாக பாவிக்க வேண்டும்.
ஏற்கனவே சிறிலங்காவின் பாரளுமன்றத்தில் சர்ச்சைகள் ஆரம்பமாகியுள்ளது. இப்பிரேரணை பற்றிய சிறிலங்கா அரசின் ஒவ்வொரு முயற்சிக்கும், அங்கு பல தடைகள் ஏற்படும். இவற்றை நாம் சர்வதேசத்திற்கு சரியான முறையில் கொடுப்பதன் மூலமே, நாம் எமது சர்வதேச அணுகுமுறையில் வெற்றி காண முடியும்.
இப் பிரேரணை பற்றிய விடயங்களை உரையாடுவதற்கோ, கலந்தலோசிப்பதற்கோ, விவாதிப்பதற்கோ தகமை கொண்டவர்கள் யாராவுதல் முன்வந்தால், அவர்கள் விரும்பும் ஊடகத்தில், நடுநிலை கொண்ட அனுசரணையாளருடன் விவாதிப்பதற்கு தயாராகவுள்ளேன் என்பதை இக் கட்டுரை மூலம் தெரியத்தருகிறேன்.
நிச்சயம் இவ் ஆய்வு மற்றவர்களிற்கு பயனுள்ளதாகவும், அறிவுதரும் விடயமாகவும் அமைய வேண்டும்.
வரைவுத் தீர்மானம்
29 செப்டம்பர் 2015
A/HRC/30/L.29
மனித உரிமை சபை
முப்பதாவது அமர்வு
நிகழ்ச்சி நிரல் 2
வரைவுத் தீர்மானம் – அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கிரீஸ், லாட்வியா, மாண்டிநீக்ரோ, போலந்து, ருமேனியா, சிறிலங்காவில், மாசிடோனியா, பிரிட்டன், அமெரிக்கா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு.
30/…சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை நிலை நாட்டுவதற்கு
மனித உரிமை சபை
ஐக்கிய நாடுகள் சாசனம் நோக்கங்களுக்களை மற்றும் கொள்கைகளை மறு உறுதி செய்து
மனித உரிமைகள் பிரகடனத்தின் மனித உரிமைகள் மற்றும் பிற சர்வதேச உடன்படிக்கைகளின் வழிநடத்தலில்,
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஊக்குவித்து, மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா மீதான தீர்மானங்களான 19/2 – 22 மார்ச் 2012; 22/1 – 21 மார்ச் 2013 மற்றும் 25/1 – 27 மார்ச் 2014 நினைவுகூர்ந்து,
சிறிலங்காவின் இறையாமை, சுதந்திரம், ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்து
ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்களது அனைத்து மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு அவ் நாடே பொறுப்பு என்று மறு உறுதி செய்து
சிறிலங்காவில் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் 2015 நடைபெற்ற நியாயமான சரித்திரம் வாய்ந்த ஜனநாயக தேர்தல்களை வரவேற்று, அங்கு ஏற்பட்டுள்ள அமைதியான அரசியல் மாற்றத்தையும் வரவேற்று,
சிறிலங்காவின் அரசியலமைப்பில் கூறப்பட்ட அரசியலமைப்பு கடமைக்கு அமைய, கொண்டுவரப்பட்டுள்ள பத்தொன்பதாவது திருத்தச் சட்டம், தேசிய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட ஜனநாயகத்தை மேன்மைபடுத்துவதற்காக முக்கிய நிறுவனங்கள் உட்பட சுயாதீனமான பங்களிப்பு செய்வது சிறிலங்காவின் ஜனாதிபதியின் தார்மீக கடமையாகும்,
ஜனவரி 2015 இருந்து சிறிலங்காவின் அரசு மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தற்கும் நல்லாட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தவும் முன்னெடுப்பதற்கும் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்று,
மேலும் லஞ்சம், ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதை வரவேற்றும் இப்படியான குற்றங்களில் ஈடுபட்டொரை விசாரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள், மற்றும் தண்டனையிலிருந்து தப்புவோர் விடயங்களை முடிவிற்கு கொண்டுவருவதை வரவேற்றும்.
முன்பு யுத்த்த்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்களான வடக்கு, கிழக்கில் ஓர் சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்படுவதை நடடிவக்கை எடுக்படுவதை வரவேற்பதுடன், குறிப்பாக பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்கட்டமைப்பு, கண்ணிவெடி அகற்றும் பணிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மீள்குடியமர்த்தி சிறிலங்காவில் அரசு மூலம் முன்னேற்ற த்தை ஏற்று கொண்டும், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்கான நிரந்தர தீர்வுகளை துரிதப் படுத்துவதற்காகவும், சர்வதேச சமூகம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட யாவரையும் சிறிலங்காவின் இவ் முயற்சிகளுக்கு உதவுமாறும்,
சிவில் சமூகம் வெளிப்படுத்தும் நடைபெற்றுவரும் பாலியல் சம்பந்தப்பட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகளயும் கவனத்தில் கொண்டு இது பற்றி சிறிலங்கா அரசினால் வெளிப்படுத்தப்படும் பாரிகாரம் காணுவதற்கு முயற்சியை, கவனத்தில் கொள்ள வேண்டும், அதேவேளை சிறிலங்கா அரசு பாலினம்-சார்ந்த வன்செயல், ஆட் கடத்தல்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான பயமுறுத்தல்கள், சித்திரவதைகள கவனத்தில் கொள்ளவும்.
அனைத்து சிறிலங்கா வாழ் சகல பிரஜைகளும் ஒர் அமைதியான ஒன்றுபட்ட தேசத்தில், முழ அளவிலான மனித உரிமைகளின் அடிப்படையில் மதம், நம்பிக்கை, இன வேறுபடின்றி உள்ளவர்களாக வாழ மீழ் உறுதி செய்தும்,
பயங்கரவாதத்தை எதிர்த்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்தின் இணக்கமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் கீழ் ஒத்ததாக இருக்க வேண்டும்,
பெப்ரவரி 4, 2015ல் அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட அமைதி பிரகடனம், மற்றும் அனைத்து இனத்தவர்களின் இழப்பையும் வன்முறையினால் பாதிக்கப்பட்ட சகல இன, மதத்தை சார்ந்தவர்களின் இழப்பை கவனத்தில் கொள்வதை வரவேற்பதுடன்,
நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட அணுகுமுறைகளான, தனிப்பட்ட குற்றஞ்சாட்டு, இழப்பீடு, உண்மையை தேடுவது, நிறுவன சீர்திருத்ததை முழு வீச்சில் சேர்த்து கையாள்வதில் ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை, நியாயம் வழங்கும் பொறுப்புடைமை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதுடன், பாதுகாப்பு அமைப்பு நிறுவனங்களின் நம்பிக்கையை மீட்க, ஆட்சியாளர்கள் பங்குதாரர்களுடன் உரையாடல் மற்றும் பரந்த ஆலோசனைகளை உறுதி செய்து, மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு பார்வை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏற்ப அமையவேண்டும்,
வழிமுறைகள் கடந்த மீறல்கள் நிவர்த்தி செய்வதற்கு சுதந்திரமான, பாரபட்சமற்ற வெளிப்படையான சிறந்த அணுகுமுறையை அங்கீகரித்து, ஒருமைப்பாடு மற்றும் நடுநிலைமையை காண்பிக்கும் அனைத்து தொடர்புடைய பங்குதாரர்ககளும் கட்சிகளும் அடங்க பங்கேற்பு முறைகளை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், இளைஞர்கள், பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் புவியியல் இடங்களின் பூவியியல் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களின் பிரதிநிதிகளை கொண்ட, சர்வதேச மற்றும் உள்நாட்டு அனுபவம் அடிப்படையில் செயல்படுத்தப்படவும்
என்றும் மரியாதையான முறையில், நியாயமான முறையில் வன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது நீதி காண்பதுடன், இம்முறையில் தொழில் ரீதியான தொழில்சார் உத்தியோகத்தரது கௌரவத்தை பாதுகாப்பதுடன், ஒரு நம்பகமான பொறுப்புக் கூறல் தொடர்பாக அங்கீகரிப்படுதுடன்,
மிகவும் மோசமான குற்றங்களை புரிந்தவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டுவதுடன், தண்டனையில் இருந்து தப்புவதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மனித உரிமை, மற்றும் சர்வதேச சட்டம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிந்தவர்களை விசாரிப்பது ஓர் அரசினுடைய கடமையாக வேண்டும்,
அரசு மேற்கொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களிள் பற்றிய மீழ் பரீசிலனை, உண்மையான பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் திரும்ப கொடுப்பதை வரவேற்பதுடன், பொதுமக்களது வாழ்வாதாரங்களை சகஜநிலைக்கு இட்டு செல்ல அரசு உதவவும்,
அரசியல் அதிகாரம், அதிகாரப் பகிர்வு பற்றிய விடயங்களில் சிறிலங்கா அரசின் அக்கறைகளை வரவேற்பதுடன்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் வேண்டப்படுகிறது,
மார்ச் 30லிருந்து 3 ஏப்ரல் 2015 வரை சிறிலங்காவிற்கு விஜயம் செய்த ஐ.நா. விசேட பிரதிநிதியின் அறிக்கையில் உண்மை, நீதி, நஷ்ட ஈடு பற்றி கூறப்பட்டவற்றையும், 2015ம் ஆண்டு நவம்பர் ஐ.நா.வின் காணாமல் போவோர் பற்றி அராயும் குழு பயணம் செய்யவுள்ளதை வரவேற்பதுடன்,
மனித உரிமை சபையின் 25/1 தீர்மானத்திற்கு அமைய, சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் விசாரணை செய்து பொறுப்புக்கூறல் தேசிய செயல்முறை படுத்தப்படாத காரணித்தினால், தீர்மானம்
1. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இருபத்தி ஏழாவது அமர்வுவில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சிறிலங்கா பற்றி சமர்பித்து உரையாற்றிய வாய்வழி அறிக்கையில் சிறிலங்காவில் விசாரணை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஊக்குவித்தும், அதன் தீர்மானம் 25/1ன் கண்டுபிடிப்புகள் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் மற்றும் பொறுப்புக் கூறல் ஊக்குவித்தும் யவற்றை நடைமுறைப்படுத்துமாறு வேண்டப்பட்டதுடன், இழப்பீடு ஏற்பாடுகளும் செய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டது
2. ஜனவரி 2015 முதல் சிறிலங்காவில் அரசாங்கம் மற்றும் .நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இடையேயான உறவுகளை வரவேற்பதுடன், மனித உரிமைகள் பாதுகாப்பு, சர்வதேச ஆதரவு பொருத்தமான வடிவங்களை ஆராய்வதற்கு தொடர்ச்சி ஊக்குவிப்தன் மூலம், சிறிலங்காவில் உண்மை நீதி ஆகியவற்றை கோரும் வழிவகைகளை அறியவும்,
3. சிறிலங்காவில் அரசின் அர்ப்பணிப்பை பலப்படுத்தவும,; உண்மையை அறிவதற்கும், நீதியை தேடுவதற்கும், இழப்புகளுக்கான நஸ்டஈடுகள் போன்றவற்றுடன், மீண்டும் இவை நடாத்தப்பட நம்பகத்தன்மை கொண்ட உத்தரவாதங்களுடன், செயல்முறைகளை பாதுகாக்க அரச சார்பற்ற அமைப்புக்கள், சர்வதேச நிபுணத்துவ உதவி மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான நடவடிக்கைகளின் செயல்படுத்தல் அனைத்து பாதிக்கப்பட்ட சமூகங்களுளினருடன், சிவில் சமூகத்தின் சேர்த்து பரந்த தேசிய கலந்தலோசனையில் ஈடுபடுவதுடன், சர்வதேச நிபுணத்துவத்தை நாடுதல் போன்றவை ஆதரரிக்கப்படுகிறது,
4. சிறிலங்கா அரசாங்கம்;; இறந்தகால நிகழ்வுகளுக்கு நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகளை சேர்த்து கடந்த கையாள்வதில் ஒரு விரிவான அணுகுமுறையை மேற்கொள்ளுவுள்ள திட்டத்தை வரவேற்பதுடன், இதேவேளை நீதி, நல்லிணக்கம் மற்றும் காணாமல் போன பற்றிய அலுவலாகம் மற்றும் இழப்பீட்டு, மீண்டும் சம்பவங்கள் நடைபெறமல் பேணி காப்பது போன்ற பொறிமுறைகளையும், இவ் பொறிமுறைகளுக்கான நிதி, மற்றும் தொழில் துட்ப தேவைகளை அவர்கள் சுதந்திரமாக சர்வதேச பங்கு தராரிடம், ஐ.நா. மனித ஆணையாளர் காரியாலயம் உட்பட யாவரிலிருந்து பெற்று கொள்ளவதை வரவேற்கிறது, இவை சரியான நம்பகமான முறையில் செயல்படுத்தப்பட்டால், இந்த உறுதிப்பாடுகள் கடுமையான குற்றங்களை புரிந்த அனைத்து தரப்பும் சமரசம் அடைவதற்கு பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்பட்டு, நல்லிணக்கத்தை அடைவதற்கு வழிவகுக்கும்.
5. ஐ.நா.மனித உரிமை ஆணையளார் காரியாலயத்தின் அறிக்கையில் குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களிற்கு, ஓர் நீதி விசாரணையையும், நல்லிணக்கத்திற்கான, செயல்முறை தேவையை அங்கீகரிக்கிறது.
6. பொறுப்புடைமை கொண்ட சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் மற்றும் நீதி அமைப்பில் சிறிலங்காவில் அனைத்து இன மக்களpனது நம்பிக்கையை உருவாக்குவது அவசியம் என்று சிறிலங்காவில் அரசின் அங்கீகாரத்தை வரவேற்பதுடன், சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்படும் நீதி பொறிமுறையினான ஒரு சிறப்பு நீதிச் சபை ஸ்தாபிக்கப்பட்டு, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு; ஒரு நம்பகமான நீதி செயல்முறையை பாரபட்சமற்றவர்களாக அறியப்படும் தனிநபர்கள் தலைமையில் சுயாதீன நீதி மற்றும் வழக்கு விசாரணைகளில் நிறுவனங்கள் சேர்க்கப்படும் என்று உறுதிப்படுத்துவதுடன்,; மேலும் சிறப்பு நீதிச் சபைபையில் பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்பு வழக்கறிஞர்கள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கு தொடுனர்கள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள்.
7. இவற்றை திறம்பட செயல்படுத்த முடியும் என்று உறுதி செய்த சிறிலங்கா அரசு அதன் சொந்தக் கடமைகளை செய்வதற்கு உள்நாட்டு சட்டம் சீர்திருத்தம் செய்ய ஊக்குவித்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளையும், ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் காரியலயத்தின் பரிந்துரைகளையும், சர்வதேச கோட்பாடுகளின் அடிப்படையில், மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுடன் தொடர்புடையவர்களை அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கோட்பாட்டு விதிகளுக்கு அமைய விசாரிக்கப்பட்டு சீரான முறையில் தண்டனை ஆக்கப்படவும், இவ் நடவடிக்கைகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் உத்தேசிக்கப்பட்ட காலங்களையும் உள்ளடக்கும்,
8. இடைநிலை நீதி செயல்முறையின் வழிமுறையின் ஒரு பகுதியாக பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களுக்கு அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசை ஊக்குவிப்பதுடன், படைகளின் நம்பகமான பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அலகுகள் உறுப்பினர்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், சம்பந்தப்பட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களாக காணப்படுவோர், படைகளில் ஆட்சேர்ப்பிற்கு சாதகமற்றதாகவும், மேலும் சகல சிறிலங்கா வாசிகளின் மனித உரிமை பாதுக்பிற்கான பயிற்சிகளை அதிகரிக்கவும்,
9. அண்மையில் சிறிலங்கா அரசு சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவருடைய பாதுகாப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக கொடுத்த உறுதிப்பாட்டை வரவேற்பதுடன், சிறிலங்கா அரசு அத்தியாவசிய பாதுகாப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்டோர், சாட்சிகள், விசாரணையாளர்கள், வழக்கு தொடுநர், நீதிபதிகள் ஆகியோரையும் ஊக்குவிக்கிறது,
10. பொதுமக்களின் நிலங்களை திரும்ப கையாளிக்கும் முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசை ஊக்குவிப்பதுடன், மற்றும் உண்மையான உரிமையாளரிடம் நிலங்களை மீழ கையளிப்பதை துரிதப்படுத்துமாறு ஊக்குவிப்பதுடன், பொதுமக்களின் நாளந்த வாழ்க்கை முறையில் இராணுவ தலையீட்டை முடிவிற்கு கொண்டுவருமாறும், குறிப்பாக பொதுமக்கள் வாழ்வாதாரங்களை மீண்டும் சகஜநிலைக்கு கொண்டுவருமறும், இந்த முயற்சிகளில் சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினர் பிரதிநிதிகள் உட்பட உள்ளூர் மக்களுடைய முழு பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன்,
11. பத்திரிகையாளர்கள் தனிநபர்கள் மீதும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் மதம் சிறுபான்மை குழுக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் வழிபாட்டு இடங்கள் உறுப்பினர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அனைத்து தாக்குதல்களையும் சிறிலங்கா அரசு விசாரிக்க ஊக்குவிப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
12. சிறிலங்கா அரசு பொதுமக்கள் பாதுகாப்புக் சட்டத்தினை மறு ஆய்வு செய்யவும் மற்றும் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்து சர்வதேச சட்டத்தின் பயில்முறைக்கமைய பயங்கரவாத தடைச் சட்ட வரையறைகளை மாற்றியமைக்கவும்,
13. மேலும் தமாதமின்றி பலவந்தமான முறையில் காணாமல் போனவர்களை ஆராயும் சர்வதேச ஒப்பந்தத்தில் சிறிலங்காவை கையொப்பமிடுமாறும், காணாமற் போனவர்களின் குடும்பங்களpற்கு காணமல் போயுள்ளதற்கான சான்றிதழ்களை தற்காலிகமாக வழங்குவதாக ஏற்றுக்கொண்டதை வரவேற்பதுடன்,
14. மேலும் கடந்த ஜனாதிபதித் கமிஷன் அறிக்கைகளை வெளியிட சிறிலங்காவில் அரசு அர்ப்பணிப்பை வரவேற்பதுடனன்,;
15. பொது அல்லது தனியார் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்கள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் ஒரு விரிவான திட்டம் மற்றும் செயல்முறையை உருவாக்க சிறிலங்கா அரசை ஊக்குவிக்கிறது ;
16. தேவையான அரசியலமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு அரசியல் தீர்வை சிறிலங்கா அரசு செய்வதற்கான உறுதிமொழிகளை வரவேற்பதுடன், அரசியல் அதிகாரப் பகிர்விற்கான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை முழு அளவிலான பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அனைத்து மாகாண சபைகளும் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்த சட்டத்திற்கமைய சரியான முறையில் செயல்பட உறுதி செய்யுமாறு அரசாங்கத்தினை ஊக்குவிக்கிறது ;
17. சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய பாதுகாப்பு படைகள் அனைத்துப் பிரிவுகளுக்கும் தெளிவான உத்தரவுகளை வழங்குவதான சிறிலங்கா அரசின் அர்ப்பணிப்பை வரவேற்பதுடன், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் சித்திரவதைகள் ஆகியவற்றை விசாரணை செய்து தண்டனை வழங்கப்படுவதுன், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை சம்பந்தப்பட்ட சகல அறிக்கைகனை கவனத்தில் கொள்ளுமாறு அரசு ஊக்குவிக்கப்படுகிற,
18. ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை தொடர்ந்து இவர்களது பரிந்துரைகள் நடைமுறைபடுத்தல் பற்றியும், மற்றும் நல்லிணக்கம் மனித உரிமைகள் தொடர்பான பிற தொடர்புடைய செயல்முறைகள் செயல்படுத்தலின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, மனித உரிமை சபையின் முப்பத்தி இரண்டாவது அமர்வில் (யூன் 2016) ஒர் வாய்மூல அறிக்கையையும், அதனது முப்பத்தி நான்காவது அமர்வில் (மார்ச் 2017) ஒர் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் வேண்டப்படுகின்றார்.
19. ஐ.நா.வின் சிறப்பு செயல்முறை பிரிவினர்களுடன் சிறிலங்கா அரசு தொடர்ந்து ஒத்துளைக்குமாறு ஊக்குவிக்கப்படுவதுடன், இவர்களால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை பதில் கூறுமாறும் வேண்டப்படுகின்றனர்.
20. மேல் குறிப்பிட்ட விடயங்ககளின் நடைமுறைக்கான தொழில்நுட்ப உதவிகளையும், ஆலோசனைகளையும், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம், சிறப்பு செயல்முறை பிரிவினர்களுடனும் சிறிலங்காவுடன் இணைந்து வழங்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
10-10-2015
-http://www.tamilwin.com