அதே நேரத்தில் சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் ஜபாத் அல் நுஸ்ரா என்ற அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் பல நகரங்களைக் கைப்பற்றி தம் வசம் வைத்திருந்தனர். ரக்கா, அலெப்போ, டெய்ர் எஸ்ஸார், பால்மிரா ஆகிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தலைநகர் டமாஸ்கஸ் அருகே வரை தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்துள்ளனர்.
இதனிடையே ஐ.எஸ். ஐ.எஸ். மற்றும் ஜபாத் அல் நுஸ்ரா ஆகிய தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவதாக கூறி அமெரிக்கா தலைமையிலான நாடுகள் களத்தில் குதித்தன. மேலும் துருக்கி எல்லையில் சிரியா குர்துகளுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விநியோகம் செய்தது. இந்நிலையில் சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக திடீரென ரஷ்யா களமிறங்கியது. சிரியாவின் டார்டஸில் ரஷ்யாவின் கடற்படை தளம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
வெளிநாடு ஒன்றில் ரஷ்யா அமைத்திருக்கும் ஒரே கடற்படை தளம் இதுவே. இந்த கடற்படை தளத்தில் ரஷ்யா போர்விமானங்கள் வந்திறங்கின. முதலில் போர் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திய ரஷ்யா பின்னர் காஸ்பியன் கடற்பரப்பில் போர்க்கப்பல்களில் இருந்து ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவைப் பொறுத்தவரையில் அதிபர் ஆசாத்தை எதிர்க்கும் அனைத்து தீவிரவாதிகளையும் அழிப்போம் என சபதமெடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களையும் இலக்கு வைத்து ரஷ்யா போர்விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருக்கிறது. ரஷ்யா உக்கிரமாக தாக்குதல் நடத்தும் நிலையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கிறோம் என குண்டுமழை பொழிந்து வருகிறது.
இதனால் சிரியா வான்பரப்பில் போர் விமானங்கள் எப்போதும் பறந்தபடியே உள்ளன. அதேநேரத்தில் அமெரிக்கா, ரஷ்யா போர் விமானங்கள் தவறுதலாக மோத நேரிட்டால் அது மூன்றாம் உலகப் போராக வெடிக்கும் அபாயமும் உள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவின் உக்கிரமான வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தி சிரியா ராணுவம் தரைவழியாக வெகுவேகமாக முன்னேறி தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பல நகரங்களை மீட்டு வருகிறது.
குறிப்பாக அல் நுஸ்ரா வசமுள்ள லடாக்கியா பகுதியில் சிரியா ராணுவம் முன்னேறி வருகிறது. இதனிடையே அமெரிக்கா 50 டன் ஆயுத தளவாடங்களை கிளர்ச்சி குழுக்களுக்கு வான்வழியாக விநியோகித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சிரியாவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரு மறைமுக பெரும் யுத்தத்தை நடத்தி வருகின்றன என்கின்றனர் ராணுவ வல்லுநர்கள். களமிறங்கிய ரஷ்யாவின் சிறப்பு கமாண்டோபடை இதனிடையே சிரியாவுக்கு சிறப்பு பயிற்சிகள் பெற்ற கமாண்டோபடையையும் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.
செசன்ய தீவிரவாதிகளை ஒடுக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது இந்த சிறப்பு கமாண்டோ படை. வழக்கமான வான்வழித் தாக்குதல் போன்றவற்றுக்கு அப்பால் தீவிரவாதிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இந்த சிறப்பு கமாண்டோ படை மேற்கொள்ளும்.
இச்சிறப்பு கமாண்டோ படையினர் சிரியாவில் இணைந்து ரஷ்ய படையினருக்கும் சிரியா ராணுவத்தினருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.