பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வல்லரசு நாடுகள் மறைமுகமாகத் தடை விதிப்பதா? ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

vidoபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, வல்லரசு நாடுகள் மறைமுகமாக விதிக்கும் தடைகள், ஏற்கெனவே மர்மமாக இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நடைமுறைகளில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஐ.நா.வில் இந்தியா கண்டனம் தெரிவித்தது.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வியை பாகிஸ்தான் விடுதலை செய்ததைக் கண்டித்தும், இதுதொடர்பாக பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்கக் கோரியும், ஐ.நா. நடவடிக்கை குழுவில் கடந்த ஜூன் மாதம் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், தனது குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரத்தை இந்தியா அளிக்கவில்லை என்று தெரிவித்து, அந்த தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில், இந்தியா இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் “பெண்கள், அமைதி, பாதுகாப்பு’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் அசோக் முகர்ஜி பேசியதாவது:

மோதல் போன்ற சூழ்நிலைகளில் அதிகரிக்கும் பயங்கரவாதத்தால் எழும் பிரச்னையை உறுதியான வழியில் கையாள்வதற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளை தண்டித்தல், அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.

ஆனால், தொழில்நுட்ப தடை அல்லது முட்டுக்கட்டை என்ற பெயரில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் சில நிரந்தர உறுப்பு நாடுகள் பொறுப்புணர்வு இல்லாமல் மறைமுகமாக விதிக்கும் தடைகள், ஏற்கெனவே மர்மமாக இருக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நடைமுறைகளை மேலும் பாதிப்புறச் செய்கின்றன.

மோதல் ஏற்படாமல் தடுத்தல், மோதலுக்கு தீர்வு காணுதல், மோதலுக்கு பிந்தைய கட்டுமானம் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு முழு அளவிலானதாகவும், அர்த்தமுடையதாகவும் இருப்பதை ஐ.நா. ஊக்குவிக்க வேண்டும்.

ஐ.நா. அமைதி காப்புப் பணியில் முக்கிய பங்களிப்புகள் அளித்து வரும் இந்தியா போன்ற நாடுகள், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இல்லை. அதுபோன்ற நாடுகள், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டு, பிற நிரந்தர உறுப்பு நாடுகளுடன் ஐ.நா. அமைதி காப்புப் பணி குறித்து அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார் அசோக் முகர்ஜி.

-http://www.dinamani.com