ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளை தடுக்க துருக்கி இணக்கம்

refugees_001ஐரோப்பாவுக்குள் வந்திருக்கும் குடியேறிகளை தடுப்பதற்கு மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க துருக்கி இணங்கியுள்ளது.

பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

பிரசல்ஸில் நேற்றுப் பின்னிரவு நடந்த பேச்சுவார்த்தையில் துருக்கிக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பியத் தலைவர்கள் தீர்மானித்தனர்.

‘குடியேறிகளை தடுப்பதில் முன்னேற்றம் காண்பதற்கும்- துருக்கிப் பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விசா இல்லாமல் பயணிப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் இடையேயான வெளிப்படையான தொடர்பு ஒன்று இங்கே உருவாக்கப்பட்டுள்ளது’ என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் கூறினார்.

சிரியாவில் நடக்கும் போரிலிருந்து தப்பிவருபவர்களை பராமரிப்பதற்காக துருக்கிக்கு சுமார் மூன்று பிலியன் யூரோ நிதியுதவி வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்துவருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியையும் சேர்த்துக் கொள்வது தொடர்பான விவகாரமும் மீண்டும் ஆராயப்படவுள்ளது. -பிபிசி தமிழ்