அலெப்போ நகரில் சிரியா ராணுவம் தாக்குதல்

syria_armyரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் சிரியா ராணுவம் அந்த நாட்டின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.

இதைச் சாதகமாகப் பயன்படுத்தி சிரியா ராணுவம் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், அலெப்போ நகரிலும் சிரியா படைகள் கிளர்ச்சிக் குழுக்கள் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

சிரியாவின் பொருளாதார மையமாகத் திகழ்ந்த அலெப்போவின் ஒரு பகுதி அரசுப் படையினரின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இந்த நகரில் இருதரப்பினருக்கும் இடையிலான எல்லையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ரஷியாவின் வான்வழித் தாக்குதல் தொடங்கிய பிறகு முதல் முறையாக அந்த நகரின் கிளர்ச்சியாளர் பகுதியில் ராணுவம் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

அலெப்போ நகர நடவடிக்கை குறித்து சிரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “”பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து அலெப்போ மக்களை மீட்பதற்காக அந்த நகரின் மேற்கு மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:

அலெப்போ நகரத் தாக்குதலில் இதுவரை 2 கிராமங்களை சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் இரண்டு கிராமங்களில் ரஷிய விமானங்கள் கடுமையாகக் குண்டு வீசி வருகின்றன என்றார்.

இந்த நடவடிக்கையில் ஈரான், லெபனான் நாடுகளைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சேர்ந்த 2,000 பேர் பங்கேற்றுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “”சிரியா அதிபர் அல்-அஸôதுக்கு ஆதரவு அளிப்பதிலும், அவருக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகவும் ரஷியா, ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன” என்றார்.

-http://www.dinamani.com