முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி சீனாவுக்கு எதிரானது அல்ல: அமெரிக்கா

india-and-us-flagவங்காள விரிகுடா கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சி, சீனாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ எதிரானது அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னதாக இக்கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் பங்கேற்க சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா-ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆசியாவுக்கு ஆபத்தானது என்றும் சீனா தெரிவித்தது.

எனினும் முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி, கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்காவின் “தியோடர் ரூஸ்வெல்ட்’ போர்க்கப்பலில் இருந்தபடி, அந்நாட்டின் கடற்படை அதிகாரி ராய் ஜே கெல்லி, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

ஆசிய-பசிபிக் கடற்பகுதியானது, உலகின் இதர பகுதிகளுக்கு மிக மிக முக்கியமானதாகும். ஏனெனில் பெரும்பாலான கடல்சார் வர்த்தகம் இதன் வழியாகவே நடைபெறுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி, சீனாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ எதிரானது அல்ல. முத்தரப்பு கடற்படைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், சுதந்திரமான சர்வதேச கடல் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலுமே, இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மூன்று நாடுகளின் கடற்படையினரும் பல்வேறு உத்திகளை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்கு, இப்பயிற்சி உதவுகிறது என்றார் கெல்லி.

முன்னதாக இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டுப் பயிற்சியில் தாங்களும் பங்கேற்பது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று ஜப்பான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com