மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை சவூதி அரேபியா ஏற்படுத்தி வருகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், காலனியாதிக்க மனப்பான்மையுடன் ஈரான் நடந்து கொள்கிறது என்று ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்ஸி அஃப்காம், தலைநகர் டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான் நாட்டுக்கும் சன்னி இஸ்லாமியப் பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதிக்கும் முன்பகை இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற சிரியா அதிபர் பஷார் அல்-அசாதுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் சண்டையிடத் தொடங்கியதிலிருந்து, ஈரான் – சவூதி பகை முற்றியது.
மேலும், யேமனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் துணையாக உள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இதுவும் ஈரான் – சவூதி கசப்புக்கு ஒரு காரணம். அண்மையில் சவூதியில் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டபோது நூற்றுக்கணக்கானோர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதில் 464 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, இரு நாடுகளிடையேயான சொற்போரில் கடுமை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிரியா, இராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிட்டு வருகிறது என்று சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் ஆதில் அல்-ஜுபேர் திங்கள்கிழமை நேரடியாகக் குற்றம்சாட்டினார்.
“சிரியாவுக்கு ஆயுதம் அளிப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்நாட்டிலுள்ள தங்களது வீரர்களை ஈரான் விலக்கிக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சவூதியின் இறையாண்மையை காத்துக் கொள்வோம்’ என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்ஸி அஃப்காம் டெஹ்ரானில் தெரிவித்ததாவது: மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை சவூதி அரேபியா ஏற்படுத்தி வருகிறது.
அகந்தையுடனும், வெறுக்கத்தக்க ரீதியிலும் சவூதி நடந்து கொள்கிறது. காலனியாதிக்க மனப்பான்மையில் பேசி வருகிறது.
கடந்த 7 மாதங்களாக யேமனில் குண்டு மழை பொழிந்து வரும் சவூதிக்கு, மேற்காசிய நாடுகள் பற்றிப் பேசத் தகுதி இல்லை என்று ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்ஸி அஃப்காம் கூறினார்.
-http://www.dinamani.com