காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்கா உதவ வேண்டும்: பாகிஸ்தான்

Kashmir-Mapகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், இவ்வாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் எய்ஜாஸ் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பிரச்னை நிலவ காஷ்மீர் பிரச்னையே முக்கிய காரணமாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவி செய்ய வேண்டியது, அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் அமெரிக்க பயணத்தின்போது, இந்தியாவுடன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்கப்படும்.

இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை மேற்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. இதன் காரணமாகவே, தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சென்றார். ஆனால், இந்தியாவிடம் இருந்து ஆக்கப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை என்றார் எய்ஜாஸ் அகமது.

அமெரிக்காவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக நவாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை இரவு செல்லவுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வரும் 22ஆம் தேதி அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருந்தளித்து கௌரவிக்கவுள்ளார்.

-http://www.dinamani.com