காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி – மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை நடந்த உண்மைகள் பலவற்றை உறுதி செய்வதாக இருப்பது கண்டு மனம் ஆறுதல் அடைகிறது.
சனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை பொய்யானவை என்று ஓரம்கட்டி விட முடியாது என்று குறிப்பிடும் ஆணைக்குழு, அதில் உண்மைத் தன்மை உண்டு என்பதையும் ஏற்றுள்ளது.
வன்னிப் போரின் போது படையினர் நடத்திய தாக்குதல்கள், புலித்தேவன் உள்ளிட்டவர்களின் சரணடைவு எனப் பலவற்றின் உண்மைத்தன்மையை காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்றுக் கொண்டு அவற்றை அறிக்கைப்படுத்தியுள்ளது.
ஆக, ஆணைக்குழுவில் இருந்தவர்கள் தங்கள் மனச்சாட்சிக்கு அமைவாக – இறைவனுக்குக் கணக்குக் கொடுக்கும் வகையில் நீதியோடு செயற்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.
ஒரு முறை ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சாட்சியங்களைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள் அழுது புலம்பி தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.
இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் பரணகம நெஞ்சுவலிக்கு ஆளானதால், தன்னால் தொடர்ந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறியதால், அன்றைய சாட்சியம் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பில் இந்த இடத்தில் நாங்கள் எழுதியதை நினைவுபடுத்துவது பொருத்துடையது.
ஆணைக்குழுவின் தலைவர் பரணகமவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டமை அவரின் மனிதத்தை காட்டுகிறது.
இப்படியானவொரு அனர்த்தத்தை இதயம் உள்ள எந்த மனிதனாலும் ஜீரணிக்க முடியாது. ஆணைக்குழுவின் தலைவர் பரணகமவை, தமிழ் மக்களின் இழப்புக்கள் நிச்சயம் பாதித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம். அன்று நாம் குறிப்பிட்டதில் உண்மை உண்டு என்பதை உறுதி செய்வதாக பரணகமவின் அறிக்கை அமைந்துள்ளது.
ஆம், வன்னிப் போரில் நடந்த அவலங்களைக் கேட்கின்ற எவரும் இனம், மதம், மொழி என்ற பேதங்களைக் கடந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நிச்சயம் நினைப்பர். இல்லையேல் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும்.
ஆணைக்குழுவின் தலைவர் பரணகமவும் அவர் சார்ந்தவர்களும் மட்டுமல்ல, பரணகமவின் இடத்தில் மகிந்த ராஜபக்ஷ , கோத்தபாய ராஜபக்ஷ , விமல் வீரவன்ச போன்ற வன்கணாளர்கள் இருந்திருந்தாலும் நிச்சயம் அவர்களின் மனங்களும் கரைந்திருக்கும் – இதயம் வலித்திருக்கும்.
இருந்தும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சித் தலைவர்கள் மக்கள் படும் துன்பங்களை – அவர்கள் விடும் கண்ணீரை நேரில் பார்ப்பது கிடையாது. எதையும் அறிக்கையாக பார்ப்பதாலும் வாசிப்பதாலும் அவர்களின் மனங்கள் ஜடத்துவமாகி விடுகின்றன.
ஆனால் அத்தகையதொரு நிலைமை பரணகமவுக்கு இல்லை. அவர் இழந்தவர்களை, போரில் அகப்பட்டு மீண்டவர்களை, ஏதும் அறியாத அப்பாவிகளை நேரில் சந்தித்தார். அவர்களின் உள்ளக் குமுறலை அவர்களின் வேதனையை நேரில் கண்டு அனுபவித்தார்.
அதனால், தன் இனம் என்று இம்மியும் பாராமல் பரணகம நீதியாக தனது அறிக்கையை கையளித்துள்ளார். அவருக்கு தமிழ் மக்கள் என்றும் நன்றியுடையவர்கள்.
ஆயினும் பரணகமவின் அறிக்கை பேரினவாதிகளுக்கு உடன்பாடாக இராது என்பதால், பரணகமவின் அறிக்கையும் விரைவில் பழுதாகிப் போவது நிச்சயம்.
-http://www.tamilwin.com