இந்தியாவுக்கு எதிராகப் புகார்: அமெரிக்காவிடம் ஆதாரங்களை அளித்தது பாகிஸ்தான்

india-pakistan-flag_0பாகிஸ்தானில் நடைபெற்ற நாச வேலைகளில் இந்தியா ஈடுபட்டது என்று குற்றம்சாட்டி, அது தொடர்பான மூன்று ஆவணங்களை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியிடம் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு, புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, ஃபட்டா, பலூசிஸ்தான், கராச்சி ஆகிய மாகாணங்களில் நிகழ்ந்த நாச வேலைகளில் இந்தியாவுக்கு இருக்கும் பங்கு தொடர்பான மூன்று ஆவணங்களை, பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்தார். அப்போது, இந்தியாவின் செயல்கள் குறித்து கெர்ரி கவலை தெரிவித்தார்.

இந்தியாவுடனான உறவை சுமுகமாக்குவதற்காகவும், ஆப்கானிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, ஜான் கெர்ரி பாராட்டு தெரிவித்தார். மேலும், வடமேற்கு எல்லைப் பகுதியில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் முன்னேற்றம் தென்படுவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் சமரச முயற்சிகளை மேற்கொள்வது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பிராந்தியத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த கெர்ரி, அந்த முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவுடனான அடுத்த பேச்சுவார்த்தையின்போது இந்த மூன்று ஆவணங்களையும் பாகிஸ்தான் அளிக்கும் என்றும், பாகிஸ்தானின் சர்வதேச நட்பு நாடுகளுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும் என்ற காரணத்தாலேயே, அமெரிக்காவிடம் ஆதாரங்களை அளித்ததாகவும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலர் அஜீஸ் அகமது செளதரி புதன்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, இந்த மூன்று ஆவணங்களையும் ஐ.நா.சபையிடம் பாகிஸ்தான் கடந்த மாதம் அளித்திருந்தது.

இருதரப்பு பேச்சுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்: இதனிடையே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க இருதரப்பும் நேரடிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இயல்பான ஒத்துழைப்பு மூலம் இரு நாடுகளும் ஆதாயமடையும் என்று நாங்கள் கருதுகிறோம். பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஜான் கிர்பி.

எனினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரங்கள் அளித்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் தெரிவித்தார்.

-http://www.dinamani.com