உலக நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறதா ஜநா?

United-Nations-Peacekeepersஉலக நாடுகளின் முக்கியமான உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுடனான பிரச்சனைக்கு சர்வதேச பாதுகாப்பு அமைப்பாக விளங்குவது ஐ.நா.சபை.

அந்த ஐக்கிய நாடுகள் சபையை நினைக்கவும் மதிக்கவும் செய்யும் வகையில் ஒரு தினம் அக்டோபர் 24 ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐ.நா. பொதுசெயலாளர் இந்த தினம் பற்றி கூறுகையில்: ஐக்கிய நாடுகள் அமைப்பு பல்வேறு நாடுகளின் பிரச்சனையின் காரணமாக, ஒரு நெருக்கடியான நிலையில் உள்ளது.

எங்களுக்காக ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை வெற்றிகரமாக முடிக்கவும், பாதிக்கப்பட்ட தரப்புகளை சீர்தூக்கி நிறுத்தவும் முயற்சிப்போம். இதற்காக அரசுகளும் தனியார் அமைப்புகளும் இந்த சர்வதேச அமைப்புக்கு ஒத்துழைப்பு தருவதன் அடையாளமாக இந்த தினத்தை நம்மோடு சேர்ந்து கொண்டாட அழைக்கிறேன்.

இன்றைய சூழலில் பல நாடுகளில் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கான தீர்வு காண்பதில் சர்வதேசத்தின் உச்ச அமைப்பாக இருக்கும் ஐ.நா. திருப்திகரமான நீதிபரிபாலனைக்கு செயல்பட்டதா என்றால் கேள்விக்குறியே.

பிரச்சனைகளை நீடிக்க வைக்கும் ராஜதந்திரமே இப்போது காணப்படுகிறது. சம்பிரதாயமாக நடக்கும் தின கொண்டாட்டத்தை ஐ.நா. அமைப்பு நினைவுப்படுத்துகிறது என பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்கள் கருதுகின்றனர்.

இலங்கையில் நடந்தது ஒரு இனகலவரம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சிங்களர் கையில் அரசங்கமும் தமிழர்களுக்கு அதிகார ஆதரவற்ற நிலையுமே அங்கு இருந்தது.

ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலிகள் மீது மட்டுமல்லாமல், நியாயமான அடிப்படை உரிமைகளை எதிர்பார்த்திருந்த அப்பாவி தமிழ் மக்கள் மீதும் ஆயுத வன்முறையை இலங்கை அரசாங்கமே முடுக்கிவிட்டது.

ஒரு அரசாங்கமே இனவாதத்தை கையில் எடுக்கும்போது, தனிமனித அமைப்புகள் சில தீவிரவாத அழிவுகளை நிகழ்த்தியிருந்தாலும் கூட, அதை தீய சக்தியாகவோ, ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள் செய்த அழிவுகளுக்கு சமமாகவோ கருதமுடியாது. இதை மனசாட்சி உள்ளவர்களும் ஐ.நா. போன்ற அமைப்புகளும் அதை உணரவேண்டும்.

ஒரு நாட்டில் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் தேவைகளும் சிறுத்துப்போவதில்லை அதற்காக, உரிமைகேட்பதில் தவறில்லை.

உரிமை கேட்பதையே தங்கள் உரிமையை பறிக்க வருவதாக தொலைநோக்கு பயத்தில் ஒரு அரசு அதை மறுப்பது கண்மூடித்தனமே.

போரில் பெற்றோர், சகோதரர், உறவினர்களை பலிகொடுத்துவிட்டு மிச்சமீதி இருந்த ஒரு சிலரையும் கைதிகள் என்ற பெயரில் சிறைப்பிடித்ததால், மகன் இல்லாத தாய்களும் கணவன் இல்லாத மனைவிகளும், பெற்றோர் இல்லாத குழந்தைகளும் பாதுகாப்பு இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையிலும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாதது, அவர்கள் துன்பம் அரசாலும் ரசிக்கப்படுவதே.

தனது தாயகமே தனக்கு தீங்கிழைக்கும் நிலையில் உள்ள மக்களுக்காக சர்வதேச அரசாங்கம் என்ன செய்தது?

ஒரு இனத்துக்கு எதிரான அரசின் சீற்ற நடவடிக்கைகளும் ஒரு தீவிரவாதமே. எந்த நாட்டில் அகதிகள் உருவாகிறார்களோ அங்கு ஐ.நா.வை தவிர யார் துணையாக முடியும்.

முன்பு இன்னொரு நாட்டுக்குள் நாடுபிடிக்கும் நோக்கில் நுழைந்தார்கள்.. இப்போது நாடோடிகளாக, பல நாட்டு அகதிகளும் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகிறார்கள்.

முன்பு ஐ.நா. போன்ற அமைப்புகள் இல்லாமல் இருந்தது. இப்போது இருந்தும் இல்லாதது.

அரசுக்கும் மக்களுக்குமான பிரச்சனைகளில் ஐ.நா.வின் செயல்பாடுகளில் ஒரு வேகமில்லாதது, சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com