வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்து செல்லும் கடத்தல்கார்களுக்கு பணத்தை செலுத்துவதற்காக சில அகதி பிள்ளைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அகதிகளுக்கான ஐநா முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பிள்ளைகள் பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நம்பிக்கையான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும் இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கோருவதாகவும் முகவர் அமைப்பு கூறியுள்ளது.
ஐரோப்பாவுக்கு அகதிகளாகவும் குடியேற்றவாசிகளாகவும் செல்லும் பிள்ளைகள் அதிக சன நெரிசலை கொண்ட நுழைவிடங்களில் பாலியல் வன்முறை உட்பட பயங்கரமான வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் பேச்சாளர் மெலிசா பிலேமிங் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல் முகவர்களுக்கு செலுத்த பணம் இல்லாத காரணத்தினால், பிள்ளைகள் அவர்களின் பயணத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள பிள்ளைகள் பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டப்படுவதாக நம்பிக்கையான தகவல்களும் அறிக்கைகளும் கிடைத்துள்ளன.
இந்த வருடத்தில் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வந்துள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்தில் 48 ஆயிரம் புகலிட கோரிக்கையாளர்கள் வந்துள்ளதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு ஒன்றை மேற்கோள்காட்டி கிறீஸ் வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
புகலிட கோரிக்கையாளர்களை குடியேற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற காரணத்தினால் சில நாடுகள் தமது எல்லைகளை மூடியுள்ளன.
சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற போர் நடைபெற்று வரும் நாடுகளில் இருந்து அகதிகள் தென்கிழக்கு ஐரோப்பா வழியாக புகலிடம் கோருவதால், அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜேர்மனி நேற்று அறிவித்திருந்தது.
இதன் மூலம் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உதவும் செயற்பாடுகளை வேகப்படுத்தலாம் எனவும் ஜேர்மனி குறிப்பிட்டுள்ளது.
ஜேர்மனி இந்த 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளது. எனினும் அந்த திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
அதேவேளை சிரிய அரச படைகள் மற்றும் ரஷ்யாவின் போர் விமான தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்காக அகதிகள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
பெருமளவிலான மக்கள் இதுவரை துருக்கியை வந்தடையவில்லை என துருக்கிய அரசாங்கமும் உதவி அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எனினும் அது நடக்க மேலும் காலம் செல்லலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய அலைக்காக தாம் தமது அணியை தயார்ப்படுத்தி வருவதாக துருக்கியின் செம்பிறை சங்கத்தின் பிரதித் தலைவர் கெரிம் கினிக் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com