இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் எமது நாட்டு மீனவர்களின் கோடிக்கானக்கான பெறுமதி மிக்க மீன் பிடி வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அழிக்கப்படுவதாக கடற்றொழில் மீன் பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிராமிய மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் கலந்து கொண்டார்.
வாழைச்சேனை ஆழ்கடல் மற்றும் சிறுபடகுகள் மூலம் மீன்பிடித் தொழிலினை மேற்கொள்ளும் மீனவர்கள், மீனவர் சங்கம் மற்றும் படகு உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
விசேடமாக வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் மீன் பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இவ் நிலமையானது அப்பகுதி மீனவர்களின் பொருளாதாரத்தில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இம் மீனவர்களின் வருகை கிழக்கு பகுதிக்கும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க இந்திய உயர் ஸ்த்தானிகருடன் பேச்சுவார்தையினை அண்மையில் மேற்கொண்டிருந்தேன்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் விடுதலை தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்தை மேற்கொண்டிருந்தேன். இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளையும் வலைகளையும் அரசுடமையாக்கப்படும் இதன் மூலம் மீனவர்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவோம் என்றார்.
இதேவேளை பிரதேச மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டது.
வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு செல்லும் மீன் படகுகள் புல்லாவி கல் எனப்படும் கல்லில் அடிக்கடி மோதி விபத்தினை எதிர்நோக்கி வருவதாகவும், அதனை தடுக்க அப்பிரசேத்தில் வெளிச்ச வீடு ஒன்றினை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
டீசல் மானியம் வழங்க வேண்டும் என்றும் படகுகளின் போக்குவரத்தில் போது மணல் திட்டுக்கள் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் காணப்படுவதாகவும், இது போக்குவரத்திற்கு சிரமத்தினை ஏற்படுத்தி வருவதாகவும் கோரிக்கை விடுத்தனர்.
மேற்படி கோரிக்கையினை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் சர்வதேச கடலில் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதற்கான படகுகளை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீனவர்களுக்காக இலவச வீடு மற்றும் மலசல கூட வசதிகளை வழங்கி மீனவர்களின் நலனுக்கு உதவவுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
-http://www.tamilwin.com