ஐ.நா.வில் ஆங்கில உரையாற்றிய நவாஸ் ஷெரீஃப் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றியதற்காக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உருதுவை அதிகாரபூர்வமான மொழியாக அறிவிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஐ.நா.வில் அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அங்கு ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

உருதுவில் பேசாமல், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய அவரது செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று ஜாகித் கனி என்பவர், பிரதமர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 204, 2003-ஆம் ஆண்டு இயற்றிய நீதிமன்ற அவமதிப்பு தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நவாஸ் ஷெரீஃப் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த நபர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி உள்ளிட்டோர் ஐ.நா.வில் அவரவர் தாய்மொழியில் உரையாற்றினர் என்று மேலும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com