ஜெனிவா தீர்மானம் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்குள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், உயிருடன் இருக்கமாட்டார்கள் என யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று யாழ்.வந்த சர்வதேச பெண்கள் விடயங்களுக்கான அமெரிக்க தூதுவர் கத்ரின் றசலிடமே ஆயர் இதனை வலியுறுத்தினார்.
ஐ.நா. மனித உரிமைகள்ஆணையகத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வருவதற்கே 6 வருடங்கள் தேவைப்பட்டது.
அந்த தீர்மானம்நடைமுறைப்படுத்தப் படுவதற்கும் பல வருடங்களாகும். அதற்குள்பாதிக்கப்பட்ட மக்கள் உயிரிழக்கும் நிலையே உருவாகும்.
எனவே ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சமமாக தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடமாகாணத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கல்போன்ற விடயங்களையும் நடைமுறைப்படுத்துங்கள் எனக் கோரியுள்ளார்.
குறித்த சந்திப்பின் நிறைவில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு ஆயர் கூறுகையில்,
இச் சந்திப்பில் மிக முக்கியமாக இடம்பெயர்ந்து நீண்டகாலமாக மாற்று இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும், எங்களுடைய தமிழ் மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.
மேலும் சிறைகளில் எவ்விதமான விசாரணைகளும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எங்களுடையதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை கூறியிருக்கின்றேன்.
இதேவேளை அவர்கள் விசேடமாக போர், விதவைகள் தொடர்பாக கேட்டிருந்தார்கள். அதில் போரினால் விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குகின்றதா? எனக் கேட்டார்கள்.
அதற்கு நாம் பதில் வழங்குகையில், அரசாங்கம் அவ்வாறானவர்களுக்கு வழங்குகின்ற உதவியானது மிகவும் சொற்பமானது, ஆனால் தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் மதம் சார் அமைப்புக்கள் உதவிகளை செய்கின்றன.
ஆனால் அவையும் கூட போதுமானதாக இல்லை. இந்நிலையில் இவ்வாறான பாதிக்கப்பட்ட விதவைகளை அரசாங்கம் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்க வேண்டும்.
அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு கேட்டிருக்கின்றேன்.
மேலும் யாழ்.மாவட்டத்தை எவ்வாறு முன்னேற்றலாம், அதேபோன்று இங்குள்ள போதைப்பொருள் பாவனையினை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரலாம்? என்பது தொடர்பாக கேட்டபோது,
முக்கியமாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணம் வேலையில்லாத பிரச்சினையே.
அந்தவகையில்வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் ஊடாக இவ்வாறான போதைப்பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணலாம் என்பதை சுட்டிக்காட்டினேன்.
மேலும் அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியாத நிலை உருவாகுமானால், அதனை வேறு அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு அவ்வாறான அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு, அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் நான் கேட்டிருக்கிறேன் என்றார்.
-http://www.tamilwin.com