நிஜமான நாயகர்களும் போலிக் கதாநாயகர்களும்..!

ranil_nadesan_001இலங்கை ஜனாதிபதியின் இல்லமான அலரி மாளிகையில், 2008ல், ஆடம்பர பாதாள அறை ஒன்று கட்டப்படுவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியவர், சன்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் – லசந்த விக்கிரமதுங்க.

அப்படி எழுதியதற்காக அவர் மிரட்டப்பட்டார், அவரது நிகழ்ச்சியை ஒளிபரப்பிவந்த தொலைக்காட்சி நிலையம் தகர்க்கப்பட்டது, உச்சக்கட்டமாக கொழும்பு நகரின் நடுவீதியில் பட்டப்பகலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகிந்தனின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில், அந்த மிருகத்துடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்களில் ஒருவர் லசந்த.

அப்போது மகிந்த மிருகம், கம்யூனிசத் தோல் போர்த்துக் கொண்டிருந்தது.  அதை நம்பினார் லசந்த. அதற்காக அவர் கொடுத்த விலை, உயிர்.

கோத்தபாயவின் கூலிப்படைதான் லசந்தவைக் கொன்றது என்பது ஊரறிந்த ரகசியம்.

அதை நிரூபிக்க உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காமல், ‘லசந்த கொலை தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தகவல் தரலாம்’ என்று, இப்போது வெட்டியாக விளம்பரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது மைத்திரி அரசு.

இதே மாதிரி ஒரு விளம்பரத்தை, ஒன்றரை லட்சம் பேர் படுகொலை தொடர்பாகக் கூட கொடுக்க வேண்டாம், இசைப்பிரியா என்கிற ஒற்றை உயிர் தொடர்பாகவாவது கொடுக்க மைத்திரி அரசு தயாரா?

லசந்தவைப் போலவே இசைப்பிரியாவும் ஊடகத்துறையில் இருந்தவர்தானே…. ‘இசைப்பிரியா படுகொலை தொடர்பாக கல்லம் மேக்ரே வெளியிட்ட புகைப்பட ஆதாரங்களில் வெளிப்படையாகத் தெரியும் இராணுவத்தினர் யாரென்று அடையாளம் காட்டுங்கள்….

அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தெரிவியுங்கள்’ என்று அறிவிக்க முடியுமா மைத்திரி?

இதையெல்லாம் கேட்கும் துணிவு இலங்கையில் இருக்கும் எந்த ஊடகத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. லசந்தவைக் கொன்றவர்களைக் கைது செய் – என்பதைக் கூட அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தாமல்,

மகிந்தனின் ஆடம்பர பாதாள அறை குறித்த அலப்பரையிலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள், கொழும்பு பத்திரிகையாளர்கள்.

‘அது புலிகளின் தாக்குதலைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்ட பதுங்கு குழி… அது ஒரு பாதுகாப்பு வசதி…. நீங்கள் நினைக்கிற மாதிரி ஆடம்பரமெல்லாம் இல்லை…’ என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது மகிந்த மிருகம்.

‘ஒரு பதுங்கு குழி பற்றி எழுதியதற்காகவா, லசந்தவை சவக் குழிக்கு அனுப்பினாய்’ என்று யாரும் திருப்பிக் கேட்டதாகத் தெரியவில்லை.

பத்திரிகையாளர்கள் கேட்கத் தவறினால் கூட, மகிந்த மிருகம் யார் யாரை சவக்குழிக்கு அனுப்ப முயன்றது என்பதை யாராவது ஒருவர் அம்பலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது, பிள்ளையானின் முறை. கருணா கோஷ்டியில் இருந்தவர், அவர். பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் பிள்ளையான், ‘மைத்திரியையும் கொலை செய்’ என்று மகிந்தன் தன்னைத் தூண்டியதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மைத்திரி கொல்லப்பட்டிருந்தால் – ‘புலிகளின் கொலைவெறித் தாக்குதலில் மைத்திரி பலி’ என்று உடனடியாக அவதூறு பரப்பப் பட்டிருக்கும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்….. கட்சிக்குள் இருக்கும் துரோகியையும் காலி செய்வது, எதிரிகளான புலிகள் மீது இன்னொரு கொலைப்பழியைக் கூடுதலாகச் சுமத்துவது! மகிந்த மிருகம் இப்படித் திட்டமிடாமல் வேறெப்படி திட்டமிட்டிருக்கும்?

விடுதலைப் போராட்ட வீரர்களான விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்துவதற்காக, இலங்கையின் பௌத்த சிங்கள அரசியல் வெறியர்களால் என்னென்ன அவதூறுகள் பரப்பப்பட்டன, எத்தகைய சூழ்நிலைகளில் என்னென்ன காரணங்களுக்காக அப்படியெல்லாம் சதி செய்யப்பட்டது என்பது குறித்து விரிவாக யாராவது ஆய்வு செய்யலாம். அந்த அளவுக்கு அடர்த்தியான ‘ஏரியா’ அது!

லட்சுமண் கதிர்காமர் படுகொலையிலும் மகிந்த ராஜபக்சவுக்குப் பங்கிருக்க வாய்ப்புள்ளது – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது, அப்படியொரு ஆய்வு மிக மிக அவசியம் என்று தோன்றுகிறது.

ராஜீவ்காந்தி படுகொலையைக் கூட அந்த ஆய்வுக்கு உட்படுத்தலாம். அப்போதுதான் அந்த ஆய்வு, முழுமையான ஆய்வாக இருக்கும்.

கொலைச் சதி தொடர்பாக மட்டுமே ராஜபக்ச மீது ரணில் குற்றஞ்சாட்டவில்லை. ‘வெள்ளைக்கொடியோடு வந்த புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முயன்றது ராஜபக்ச அரசு’ என்கிற புதிய புகார் ஒன்றையும் தெரிவித்திருக்கிறார்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மகிந்த ராஜபக்ச, மைத்திரிபாலா சிறிசேனா, ரணில் விக்கிரமதுங்க – என்று பெயர்கள் மட்டும்தான் மாறுகின்றன. ஒரு மிருகம் கழுத்தில் சிகப்புத் துப்பட்டா போட்டிருக்கிறது, இன்னொன்று போடவில்லை, அடுத்த மிருகம் கோட் சூட் போட்டிருக்கிறது.

இதைத்தவிர மிருகங்களுக்கு இடையே வேறெந்த வித்தியாசமும் இல்லை. வெள்ளைக்கொடி விவகாரத்தில் இந்த மிருகங்கள் எடுக்கும் நிலை, நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

2009 மே 18ம் தேதி காலையில், முள்ளிவாய்க்காலில், ஆயுதங்கள் இல்லாமல் வெள்ளைக் கொடியோடு இராணுவத்தை நோக்கி வந்த புலித்தேவன்-நடேசன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள், சர்வதேச போர் நியதிகளுக்கு முரணாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இத்தனைக்கும், சர்வதேச சமூகத்துக்கு முறைப்படி தெரிவித்தபிறகே வெள்ளைக்கொடியேந்தி வந்தார்கள் அவர்கள்.

‘வெள்ளைக் கொடியோடு வருபவர்களைக் கொல்ல முயல்வது நியாயமா’ என்று சிங்கள மொழியிலேயே கேட்ட நடேசனின் மனைவிதான் முதலில் பலியானார்.

சிங்களப் பெண்மணியான அவரைக் கொன்றபிறகே மற்றவர்கள்மீது பாய்ந்தது இராணுவம். நிராயுதபாணிகளாக வந்தவர்களைக் கோழைத்தனமாகச் சுட்டு வீழ்த்தி, தனது போர்த் திறத்தைப் பறைசாற்றியது.

தொடக்கத்திலிருந்தே, இந்த வெள்ளைக்கொடி விஷயத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி உளறுகிறார்கள். ‘வெள்ளைக்கொடி ஏந்தி விடுதலைப்புலித் தளபதிகள் வந்தது தொடர்பில்,

முன்னதாகவே தங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை’ என்று ராஜபக்ச அரசு தொடர்ந்து கூறிவந்தது. இரண்டு வாரங்களுக்கு முன், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், ‘வெள்ளைக் கொடி ஏந்தி வருவோர் தொடர்பான விவரங்களைக் கேட்டது நான்தான்,

ஆனால் அந்த விவரங்களை அறிய முடியவில்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது கோத்தபாய மிருகம்.

ஒரு நெருக்கடியான போர்க்களத்தில், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், அப்படியெல்லாம் விவரங்களையும் அடையாளங்களையும் தெரிவிக்கிற அல்லது அறிந்துகொள்கிற வாய்ப்பு அறவே இல்லை.

அது தெரிந்தே தான், வேண்டுமென்றே அந்த விவரங்களைக் கேட்டிருக்கிறான் கோதா. ‘நான்தான் அந்த விவரங்களைக் கேட்டேன்’ என்று சொல்வதன் மூலம், ‘நான்தான் அவர்களைக் கொல்ல உத்தரவிட்டேன்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறான்.

இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம், ‘விடுதலைப் புலிகளின் தளபதிகளைக் கொல்லும்படி உத்தரவிட்டது நான்தான்’ என்று சிங்கள சமூகத்துக்கு அறிவித்து, அந்த கடைந்தெடுத்த கோழைத்தனத்தின் மூலம் தன்னை ஹீரோவாகக் காட்ட முயல்கிறான் கோத்தபாய.

அப்படியெல்லாம் அவன் ஹீரோவாகிவிடக் கூடாது என்று நினைக்கிறது ரணில் தரப்பு. அதனால்தான், ‘புலித்தேவனைக் காப்பாற்ற ராஜபக்ச முயன்றார்’ என்று ஒரு புளுகுமூட்டையை நாடாளுமன்றத்திலேயே அவிழ்க்கிறது ரணில் என்கிற நாகரிக மிருகம்.

ரணில் இலங்கையின் பிரதமராக இருக்கலாம்… அதற்காக, இனவெறி பிடித்த ஒரு ஃபாசிஸ்ட் மாதிரி ரணில் பேசியிருப்பதை சர்வதேசம் கண்டுகொள்ளாமல் இருப்பது என்ன நியாயம்? ரணில் பேசியிருப்பது ஒரு பிரதமரின் பேச்சாக இல்லை. அது ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியின் பேச்சாக இருக்கிறது.

“நான் புலித்தேவனுக்காக கண்ணீர் விடமாட்டேன்…..

புலித்தேவனைக் காப்பாற்ற ராஜபக்ச முயன்றதால்தான் இன்று ஆகப்பெரிய குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறோம்….

போர்க்களத்தில் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை களத்திலிருந்த தளபதிகளிடமே விட்டிருக்க வேண்டும். ராஜபக்ச அரசு அதில் தலையிட்டதுதான் விபரீதமாகிவிட்டது….

புலித்தேவனும் புலிகளும் சரணடைவது தொடர்பான பேரத்தில் அரசு இறங்கியது. அப்படியொரு முயற்சியில் அரசு ஈடுபடாமலிருந்திருந்தால், ‘வெள்ளைக் கொடியோடு வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்’ என்கிற குற்றச்சாட்டே எழுந்திராது. வெள்ளைக் கொடி விவகாரம் என்கிற இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது”…..

வெள்ளைக்கொடியோடு வந்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து வருத்தம் தெரிவிக்கவேண்டிய ஒரு பிரதமர், ‘புலித்தேவனுக்காக நான் கண்ணீர் விடமாட்டேன்’ என்று சிங்களத் திமிரோடு பேசுகிறார் பாருங்கள்…

இதுதான் இலங்கை அரசியல். ‘உன்னைவிட எனக்குத்தான் சிங்கள வெறி அதிகம்…. தமிழர் மீதான் துவேஷம் அதிகம்’ என்று காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால், கொழும்பில் பிழைப்பு நடத்த முடியாது.

வெள்ளைக்கொடி விஷயம் மட்டுமே, இலங்கை இராணுவத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டல்ல! பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள், திட்டமிட்ட பாலியல் வன்முறைகள் – என்று ஆகக் கடுமையான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகம்.

ஒரு இராணுவம் சொல்லிவைத்ததைப் போல் எல்லா முனையிலும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது எப்படி, அதற்கு உத்தரவிட்டவர் யார், முன்கூட்டியே அதுகுறித்து திட்டமிட்டவர் யார் – என்கிற கேள்விகள் கடுமையானவை.

இதற்கு பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை ஒருபோதும் தப்பித்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மனோதிடத்தைத் தகர்க்கும் நோக்கத்துடன் பாலியல் வன்முறை திட்டமிட்டே பயன்படுத்தப் பட்டிருக்கிறது – என்கிற குற்றச்சாட்டு வலுவடைந்து வருகிறது.

‘பாலியல் வன்முறை – என்பது இராணுவ சிப்பாய்களின் தனிப்பட்ட குற்றம் என்றால், அதற்காக அவர்களைத் தண்டிக்காதது எவருடைய குற்றம்? இலங்கை ராணுவத்தில் இருப்பதெல்லாம் மிருகங்களா’ – என்கிற கேள்வி சர்வதேசத்தின் மனசாட்சியை உலுக்குகிற நிலையில்,

அந்தக் குற்றச்சாட்டைப் பின்னுக்குத் தள்ள, வெள்ளைக்கொடி விஷயத்தைக் கையிலெடுக்கிறார்கள் அத்தனை சிங்கள வெறியர்களும்!

வெள்ளைக்கொடி விவகாரம் தான் மிகப்பெரிய குற்றச்சாட்டு – என்று கோதபாய பத்திரிகையில் சொல்லியிருப்பதைத்தான், நாடாளுமன்றத்தில் ரணில் வழிமொழிகிறார். இதிலிருந்து, இந்த திசைதிருப்பும் சூழ்ச்சி திட்டமிட்டு நடக்கிறது என்பது தெளிவாகிறது.

பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை ஐ.நா.மனித உரிமை ஆணையர் ஹுசெய்னின் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. போர்க்காலத்தோடு அந்தக் கொடுமை நின்றுவிடவில்லை.

இடைத்தங்கல் முகாம்கள், தடுப்பு முகாம்கள், புனர்வாழ்வு மையங்கள் – என்று போருக்குப் பின்பும் தொடர்ந்திருக்கிறது அந்தக் கொடுமை. இதற்கெல்லாம் நியாயம் கேட்காமல் விட்டுவிடுவோம் என்று நினைக்கிறார்களா ராஜபக்சவும் ரணிலும்!

‘போர்க் கதாநாயகர்களைக் காட்டிக் கொடுக்க மைத்திரி அரசு முயல்கிறது’ என்பதுதான் இன்றைய தேதிக்கு மகிந்த ராஜபக்ச தெரிவிக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டு.

‘போர்க் கதாநாயகர்களின் கௌரவத்துக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்வதுதான் அரசின் மிக முக்கிய வேலை’ என்பது மைத்திரி கொடுக்கும் பதிலடி. இரண்டுபேருமே சிங்கள ராணுவப் பொறுக்கிகளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

போர்க்குற்றத்தில் புலிகளுக்கும் தொடர்பிருக்கிறது – என்று சொன்னவுடன், ‘நமக்கெதற்கு வம்பு’ என்று வாயை மூடிக்கொண்டு நாம் போய்விடுவோம் என்று இருவருமே நம்புகிறார்கள்.

இந்த தவறான நம்பிக்கைக்கு நாம் பொறுப்பல்ல! ஒரு பொறுக்கி இராணுவத்துக்கு ‘போர்க் கதாநாயகர்கள்’ என்று மகுடம் சூட்ட முயல்பவர்களுக்கும், ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை இந்த இனத்தின் நாயகர்களாகக் கருதும் நமக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது.

சிங்கள இராணுவத்தைக் கூண்டில் நிறுத்து – என்று தொடர்ந்து கோரிவருகிற நாம், ‘புலிகள் மீதான புகார்களைத் திரும்பப் பெறு’ என்று ஒருபோதும் கோரியதில்லை.

இருதரப்பின் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதைக் கண்டறிய சர்வதேச விசாரணை தேவை – என்கிற நியாயமான கோரிக்கையைத்தான் வலியுறுத்துகிறோம்.

இது, சர்வதேசத்தின் மீதான நமது நம்பிக்கையை மட்டுமே காட்டவில்லை. விடுதலைப் புலிகள் என்கிற உன்னதமான இயக்கத்தின் போராளிகள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சேர்த்தே காட்டுகிறது.

நாம் உண்மையான கதாநாயகர்களை நம்புகிறோம்… சிங்கள சமூகம் பொய்யான கதாநாயகர்களைக் காப்பாற்றத் தலைகீழாக நிற்கிறது. இந்த நேரத்தில், அந்தச் சமூகத்திலிருந்தே உண்மையைப் பேச ஒரு லசந்த விக்கிரமதுங்க இல்லை.

லசந்த இன்று இருந்திருந்தால், ‘சர்வதேச விசாரணையெல்லாம் கூடவே கூடாது – என்று நாம் அடம்பிடிப்பது, நமது சொந்த இராணுவத்தை நாம் எந்த அளவுக்கு நம்புகிறோம் என்பதை சர்வதேச அளவில் அம்பலப் படுத்திவிடும்” என்று நிச்சயமாக எழுதியிருப்பான்.

அப்படி எழுத இன்னொரு லசந்த இலங்கையில் இருக்கிறானா – என்பது கேள்வியல்ல….. ‘இருக்க முடியுமா’ என்பதுதான் கேள்விக்குறி!

புகழேந்தி தங்கராஜ்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: