’பொலிசார் என்னை கொன்று விடுவார்கள்’: கனடிய அரசிடம் தஞ்சம் கோரும் அமெரிக்க கருப்பின நபர்

canada_darkman_001அமெரிக்க பொலிசாரால் கருப்பின நபர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கனடா அரசு தனக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் கனடாவிற்கு தப்பி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வந்த Kyle Lydell Canty(30) என்ற கருப்பின நபர் கடந்த மாதம் கனடாவில் உள்ள வான்கூவர் நகருக்கு வந்துள்ளார்.

அந்நகரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை செய்தபோது, ’வான்கூவர் நகரில் புகைப்படங்கள் பிடிப்பதற்காக வந்துள்ளதாக’ கூறியுள்ளார்.

ஆனால், தற்காலிகமாக வந்த அவர் நிரந்தரமாக கனடா நாட்டிலேயே தங்க முடிவு செய்து அதனை கனடிய குடியமர்வு அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.

கனடிய குடியமர்வு அதிகாரிகளிடம் கடந்த வாரம் நேரடியாக அவர் பேசியபோது, “அமெரிக்காவில் கருப்பின நபர்களை இனங்கண்டு பொலிசார் கொன்று குவித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களில் மைகேல் புரவுன் மற்றும் எரிக் கார்னர் ஆகிய இரண்டு கருப்பின நபர்களை பொலிசார் சுட்டு கொன்று இருப்பது மிக மோசமான உதாரணம்.

அமெரிக்காவில் தொடர்ந்து வசிப்பதற்கு தனக்கு அச்சமாக இருக்கிறது. எந்த நேரத்திலும் பொலிசார் தன்னை கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் அங்கு வசிக்க முடியாது.

தனக்கு இருக்கும் இந்த அச்சமானது கருப்பின நபர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் கொடுமைகளை கண்டு ஆழமாக ஏற்பட்டுள்ளது.

மேலும், தன்னுடைய சாதாரண நடவடிக்கைகளுக்கு என் மீது பல குற்றச்சாட்டுகளை அமெரிக்க பொலிசார் வைத்துள்ளதால், அந்நாட்டிற்கு திரும்பி சென்றால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

எனவே, கனடிய அரசாங்கம் தன்னை ஒரு அகதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என குடியமர்வு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கனடிய அரசின் சட்டப்படி, ‘ஒரு நாட்டு குடிமகனிற்கு அவரது இனம், மதம் மூலம் அந்நாட்டில் ஆபத்து இருக்குமானால், அவருக்கு கனடாவில் தஞ்சம் அளிக்கப்படும்.

இது போன்ற ஒரு கோரிக்கையுடன் அந்த நபர் அமெரிக்காவிலிருந்து தப்பித்து கனடா நாட்டிற்குள் நுழைந்துள்ளதால் அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக குடியமர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com