தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விரைவில் இது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில் சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டு எவ்வாறு உள்ளது என்று வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் கைதிகளாக கருத முடியாது! – பிரதி அமைச்சர் அஜித் பி பிரேரா கூறுகிறார்
விடுதலைப் புலிகளுடான போரின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டோரே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரே தவிர, அவர்களை அரசியல் கைதிகள் என்று கூறமுடியாது. இவர்களது விடுதலை குறித்து சட்டவிதிமுறை தொடர்பில் அலசி ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாறு மின்வலு மற்றும் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
புலம்பெயர் மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்து அரசு இதுவரை ஆராயவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசின் ஊடாக நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். மின்சாரம் வழங்குவது தொடர்பிலான அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
மின்சாரக் கட்டணம் தொடர்பில் புதிய சூத்திரம் தயாரிக்கப்படும். ஊழல் மோசடிகள் முழுமையாக இல்லாமல் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com