பிரபாகரன் ஒரு நல்ல மனிதர் என்கிறார் கருணா

Karunaபிரபாகரன் ஒரு நல்ல மனிதர் எனவும், எனினும் அவருக்கு உலகமயமாக்கல் குறித்த அறிவு கிடையாது எனவும், கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் ஒஸ்லோ பிரகடனத்தை கிழித்தெறிந்த பிரபாகரன் தன்னை தமிழீழ போராட்டத்தை விற்றுவிட்டதாக குற்றஞ்சாட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த பிரகடனத்தில் சமஷ்டி குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதே தவிர ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படவில்லை என்பதை தான் தெளிவுபடுத்த முயற்சித்ததாகவும் எனினும் அதனை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் திருப்தியற்ற நிலையிலேயே இருந்ததாகவும், எனினும் தான் குறித்த அறிக்கையை சமர்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஆனாலும் தன்னுடைய வாதங்கள் செவிடன் காதில் விழுந்த வார்த்தைகளாகிப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை கொலை செய்ய முயற்சித்த மாத்தையா எனப்படும் மஹேந்திரராஜாவை தான் பாதுகாத்ததாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் தான் மிகவும் மனவேதனை அடைந்ததாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட தளபதியாக கடமையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் காட்டிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த அமைப்பிலிருந்து பிரிந்துச் சென்றார்.

ஒஸ்லோ பிரகடனத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை கையயெழுத்திட வைப்பதற்கு பகீரத பிரயத்தனங்களை விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பிளவுப்படாத இலங்கைக்குள் கூட்டாட்சி அரசாங்கத்தினூடாக ஒரு அரசியல் தீர்வினை காண்பது குறித்து ஒஸ்லோ அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: