தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவது ஏன்? – சுமந்திரன் கேள்வி

sumathiranதமிழ் அரசியல் கைதிகள் நம்பவர் 7ம் திகதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஏம்.எ. சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழர்கள் என்பதாலா தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஊழல் மோசடிக்கு எதிரான நடடிவக்கை உட்பட வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த அரசு ஒருவருடத்துக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே என்றும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஊழல் மோசடிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவன்கார்ட் விவகாரம் பற்றியும் ஜே.வி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டநாட்களாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏழு வருடங்களுக்கு மேல் இவ்வாறு தடுத்துவைக்க முடியாது. எனவே, இங்கு அரசியல் காரணம் இருக்கின்றது. இந்நிலையில், இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென்று அமைச்சர்கள் துள்ளியெழுந்து கூறுகின்றனர்.

அவன்கார்ட் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கப்படுகின்றது. ஏனைய குற்றவாளிகளுக்கும் பிணை கிடைக்கின்றது. எனினும், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படுவதில்லை. இது ஏன்?

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு அணுகுமுறையும் மற்றையவர்களுக்கு வேறு அணுமுறையும் பின்பற்றப்படுவது ஏன்? தமிழர்கள் என்பதாலா அவர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?

தமது விடுதலையை வலியுறுத்தில் தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில், விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டது.

விடுதலை நடவடிக்கை ஒக்டோபர் 31ம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்றும், நவம்பர் 7ம் திகதிக்குள் விடுதலை இடம்பெறும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டது. இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், வெளிப்படையான நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா?

அதேவேளை, நாம் மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். அதேபோல்,ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கும் குரல் கொடுத்தோம். இந்நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை உட்பட அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த அரசு இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே” – என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: