62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

ranil_sampanthan_001தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பது என்றும் ஏனையவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவைக் குழுவொன்றினை அமைத்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்
வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, கூட்டமைப்பு எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

பதில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டியது அவசியமாகும். அரசியல் கைதிகள் விடயத்தில் இனியும் இழுத்தடிப்புப் போக்கு மேற்கொள்ளக்கூடாது. இம்மாதம் 7ம் திகதிக்குள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது கடினமாக உள்ளது. அதனால் கட்டம் கட்டமாக அவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அரச தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது தெகிவளை குண்டுத் தாக்குதல் உட்பட பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது கடினமாகும் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுதலை செய்வது என்றும் இரண்டாம் கட்டமாக 30 பேரை பிணையில் விடுவிப்பது என்றம் ஏனையவர்கள் விடயம் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவை அமைத்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளாககக் கருதப்பட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசாங்கமானது எத்தகைய நடவடிக்கையினையும் எடுக்க முடியாது. ஜனாதிபதியே இவ்விடயத்தில் முடிவுசெய்ய வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவானது கடந்த மாதம் 19ம் திகதி முதல்தடவையாக கூடி ஆராய்ந்திருந்தது. கடந்த மாதம் 26ஆம் திகதி இரண்டாவது கூட்டம் இடம்பெற்றிருந்தது. நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற மூன்றாவது கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-http://www.tamilwin.com

TAGS: