அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான சர்வதேச மருத்துவமனையில் 65 தலிபான்களுக்கு சிகிச்சை: தொண்டு மருத்துவ அமைப்பு தகவல்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில் 65 தலிபான் பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் “எல்லைகளைக் கடந்த மருத்துவர்கள்’ (எம்.எஸ்.எஃப்) அமைப்பின் மருத்துவமனை இயங்கி வந்தது.

இந்த மருத்துவமனை மீது அமெரிக்க விமானங்கள் கடந்த மாதம் 3-ஆம் தேதி குண்டு வீசித் தாக்குதல் நிகழ்த்தின.

இதில் எம்.எஸ்.எஃப். அமைப்பின் மருத்துவப் பணியாளர்கள் 13 பேர், 10 நோயாளிகள், அடையாளம் தெரியாத 7 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்தத் தாக்குதல் குறித்து எம்.எஸ்.எஃப். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விமானத் தாக்குதல் நிகழ்த்துவதற்கு முன்னதாகவே, அந்தப் பகுதியில் இருப்பது எம்.எஸ்.எஃப். மருத்துவமனைதான் என்பது அமெரிக்க ராணுவத்துக்கு மிகத் துல்லியமாகத் தெரியும்.

மருத்துவமனையின் அமைவிடம் குறித்து அமெரிக்காவிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் தெரிந்திருந்தும் அமெரிக்க விமானங்கள் அந்த மருத்துவமனை மீது குண்டுகள் வீசியதற்கு எந்தக் காரணமும் இல்லை.

எனவே இந்தத் தாக்குதல் குறித்த பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எம்.எஸ்.எஃப். அமைப்பின் பொது இயக்குநர் கிறிஸ்டோஃபர் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

அமெரிக்க விமானங்களின் தாக்குதல் நிகழ்ந்தபோது மருத்துவமனையில் 105 நோயாளிகள் இருந்தனர்.

போரில் காயமடைந்த தலிபான்களுக்கும், அரசு ஆதரவுப் படையினருக்கும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பிறருக்கும் அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. எனினும், மருத்துவமனையில் ஆயுதம் தாங்கிய நபர்கள் யாரும் இல்லை. அந்தப் பகுதியில் மறைந்து கொண்டு யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை.

அப்படியிருந்தும், மருத்துவமனையைத் தரைமட்டமாக்க வேண்டும், அங்கிருப்பவர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறியுடன் அமெரிக்க விமானங்கள் குண்டுகள் வீசின.

தலிபான் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் அந்த மருத்துவமனை மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியதை சிலர் நியாயப்படுத்துவது தவறு.

காயமடைந்தவர் எந்தத் தரப்புப் படையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சர்வதேசச் சட்டத்தின்படி அவர் ஒரு நோயாளியே.

அவருக்கு பாரபட்சமின்றி சிகிச்சையளிப்பது மருத்துவரின் கடமை. அவர் மீது தாக்குதல் நிகழ்த்துவதும் குற்றம் என்றார் கிறிஸ்டோஃபர் ஸ்டோக்ஸ்.

-http://www.dinamani.com