அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் வவுனியாவில் தொடர் போராட்டங்கள் நடத்த தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை தீர்மானித்துள்ளதாக அதன் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவரும், வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையில் இடம்பெற்ற வவுனியா தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்றைய கூட்டத்தில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் ஆராயப்பட்டது.
குறிப்பாக, சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்மானம் ஒன்று இன்றைய தினம் எடுக்கப்பட்டது.
குறிப்பாக கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையுடன் அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்திருந்தாலும், அது நடைபெறாத காரணத்தால் ஏற்கனவே வட மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என கோருவதுடன், அவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் அவர்களின் விடுதலைக்காக வவுனியா மாவட்டத்தில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை வவுனியாவில் நடைபெறும் மீள்குடியேற்றம், தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இது தவிர, உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் இதில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.ரதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சிவலிங்கம் உள்ளிட்ட வவுனியா தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-http://www.tamilcnnlk.com