ஏறத்தாழ 66 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா மற்றும் தைவான் நாடுகளின் அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தைவான் அதிபர் மா யிங்-ஜியோவும் சிங்கப்பூரில் சனிக்கிழமை சந்தித்தனர்.
தைவானை ஒரு நாடாக சீனா அங்கீகரிக்காததால், இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுக் கொடிகளும் இடம் பெறவில்லை.
மேலும், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருவருக்கொருவர் பதவியைக் குறிப்பிடாமல் வெறும் பெயர்களை மட்டும் சொல்லி அழைத்துக் கொண்டனர்.
இரு தலைவர்களும் தனியறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறியதாவது:
இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். சீனாவும், தைவானும் ஒரே குடும்பம். எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றார் அவர்.
தைவான் அதிபர் மா யிங்-ஜியோ கூறுகையில், “”இரு நாடுகளும் பரஸ்பர நலன்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.
சீனாவில் உள்நாட்டுப் போர் கடந்த 1949-ஆம் ஆண்டு முடிவடைந்ததிலிருந்து இதுவரை சீனா – தைவான் தலைவர்களிடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதில்லை.
நடைமுறையில் தைவான் தனி நாடாக இருந்தாலும், அதனைத் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக இப்போதும் சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com