மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தல்: ஆங் சான் சூகிக்கு வெற்றி வாய்ப்பு

அரை நூற்றாண்டாக ராணுவம் ஆட்சியில் உள்ள மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இதில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அதிபராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற்றதால் மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

யாங்கூனில் ஆங் சான் சூகி வாக்களித்தார். அப்போது மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். புன்னகையுடன் அவர்களை நோக்கி கையசைத்த ஆங் சான் சூகி, செய்தியாளர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு வாக்களித்துச் சென்றார்.

அவரது தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி கட்சிக்கும், ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஐக்கிய மேம்பாட்டுக் கட்சிக்கும் இடையேதான் முக்கியப் போட்டியாகும். 2011-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய மேம்பாட்டுக் கட்சிதான் ஆட்சியில் உள்ளது.

மொத்தம் 3 கோடி பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை முழுமையாகத் தெரியவரும். மியான்மர் நாடாளுமன்றம் 664 உறுப்பினர்களைக் கொண்டது. ராணுவப் பிரதிநிதிகளுக்காக 25 சதவீத இடங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டன. இவர்கள் தேர்தலில் போட்டியிடாமல், நியமிக்கப்படுவார்கள்.

90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆங் சான் சூகி கட்சிக்கு 66 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஆங் சான் சூகி தனிப்பெரும்பான்மையுடன் அதிபராக வேண்டுமென்றால், அவரது கட்சி போட்டியிடுவதில் 67 சதவீத இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மியான்மர் அதிபர் தெயின் சென், “தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறியுள்ளார்.

-http://www.dinamani.com